தக் லைஃப் படக்குழு எக்ஸ் தளம்
இந்தியா

தக் லைஃப் படம் வெளியிடத் தடை - கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் ரிட் மனு தாக்கல்!

கர்நாடகாவில் கமல்ஹாசன் திரைப்படம் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என பேசியிருந்தார். கமலின் இந்த கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தக் லைஃப் திரைப்படம் வெளியிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

கமல்ஹாசனுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

கன்னட அமைப்புகள் தொடர்ந்து ஒரு வாரமாக மாநிலத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் கர்நாடகா சினிமா வர்த்தகத் துறையும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கும் வரை தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.

இந்நிலையில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட அனுமதி கோரி ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், கமல் பேசியதுக்கும், சினிமாவுக்கும் இந்த திரைப்படத்திற்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் திரைப்படத்தை வெளியிட வேண்டும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில அரசு, காவல்துறை, மற்றும் கர்நாடக சினிமா வர்த்தகத் துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.