உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில் கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போயுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு விவகாரத்தில், அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கோயிலை நிர்வாகம் செய்வதற்காக ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, தலைமைச் செயல் அதிகாரி பதவி முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை தலைமைச் செயல் அதிகாரியாக ஓய்வுபெற்ற விமானப்படை உயரதிகாரி ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராமர் கோயில் நிர்வாகப் பொறுப்புக்கு 5,585 பேர் விண்ணப்பித்த நிலையில், அதில் படிப்படியாக பலர் நீக்கப்பட்டு இறுதியாக ஜிதேந்திர மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, இத்தேர்வுக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோலி, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வி.கே.சதுர்வேதி மற்றும் அணு விஞ்ஞானி சுரேஷ் ஹவாரே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டம், பட்பர் ராணி பகுதியின் போபத்புரா கிராமத்தில் பிறந்த இவர், 1986ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் போர் விமானியாகச் சேர்ந்தார். அத்துறையில் கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் பணியாற்றி கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார்.
அவருக்கு 3,000 மணி நேரத்திற்கும் மேலான விமான அனுபவம் உள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது விமானப்படையின் மேற்கு படைப்பிரிவை வழிநடத்தியவர் ஆவார். அந்த நடவடிக்கையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு 'சர்வோத்தம் யுத் சேவா' பதக்கம் வழங்கப்பட்டது.