இளமையில் காதலித்து அதை முதுமைவரை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் அனைத்துக் காதலர்களின் விருப்பமாகவும் உள்ளது. ஆனால், இது எல்லோருக்கும் நிறைவேறுவது இல்லை. இன்னும் சொல்லப்போனால் பலருக்கு தங்கள் காதல், கைகூடுவதே இல்லை.
அதேநேரம் வயதானவர்கள், தங்கள் முதுமையின்போது காதலில் விழுந்து திருமணமும் செய்துகொள்ளும் சம்பவம் சமீபகாலமாக அடிக்கடி அரங்கேறி வருகிறது. அப்படித்தான் அசாமிலும் ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது.
அசாம் மாநிலம் போககாட் பகுதியைச் சேர்ந்தவர் பத்மேஸ்வர் (71). திருமணமாகாத இவர் கடந்த காலங்களில் வீட்டுவேலை செய்துவந்துள்ளார். இந்த நிலையில், தனது சகோதரர்கள் இறந்த பிறகு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கவுகாத்தி பெல்டோலா பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் அடைக்கலமானார். அதேபோல், சோனித்பூர் மாவட்டம் தேஜ்பூரைச் சேர்ந்தவர் ஜெயபிரபா (65). இவருக்கும் திருமணமாகவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவரது சகோதரர் இறந்ததையடுத்து, முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விடப்பட்டுள்ளார். ஆனால் இது பத்மேஸ்வர் தங்கியிருந்த முதியோர் இல்லம் இல்லையாம். வேறொரு முதியோர் இல்லம் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, பத்மேஸ்வரும், ஜெயபிரபாவும் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சந்தித்துள்ளனர். அவ்வப்போது இந்தி மற்றும் பிகு மொழிப் பாடல்களைப் பாடக்கூடிய பத்மேஸ்வர், அந்தப் பாடல்களை ஜெயபிரபாவிடமிடமும் பாடிக் காட்டியுள்ளார். இதில் ஜெயபிரபாவிற்கு, பத்மேஸ்வர் மீதும் காதல் வந்துள்ளது. போலவே, பத்மேஸ்வரும் ஜெயபிரபாவை விரும்பியுள்ளார்.
இந்தக் காதல் விஷயம் இருதரப்பு முதியோர் இல்லத்துக்கும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களே இந்த திருமணத்தை நடத்திவைக்க முடிவு செய்தனர். அதன்படி, இவர்கள் திருமணத்தை மோனலிசா சொசைட்டி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி உள்ளது. மேலும், திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு என்று முதியோர் இல்லத்தில் தனியாக ஓர் அறை ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
காதல் குறித்து பத்மேஸ்வர், “ஜெயபிரபா, என் பாடல்களில் மயங்கிவிட்டார். முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அவர் என்னைப் பாடவைத்து ரசிப்பார். என் பாடல்கள் அவரைக் கவர்ந்தன" எனத் தெரிவித்துள்ளார்
ஜெயபிரபா, "இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் மனதுக்கு பிடித்தவருடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கனவு இருக்கும். எனக்கும் அது இருந்தது. தற்போது அது முழுமை அடைந்துள்ளது. பத்மேஸ்வரிடம் உண்மையான காதல் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.