அசாதுதீன் ஓவைசி File image
இந்தியா

’குண்டுவெடிப்பு’ பற்றி வீடியோ வெளியீடு.. டெல்லி வழக்கில் கைதான நபரைக் கடுமையான சாடிய ஓவைசி!

குண்டுவெடிப்பு குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், AIMIM தலைவரும் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி அதைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

Prakash J

நவம்பர் 10ஆம் தேதி மாலை 6.52 மணியளவில் செங்கோட்டை சிக்னல் அருகே ஹரியானா நம்பர் பிளேட்டைக் கொண்ட காரிலிருந்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்தது. இந்த விபத்து தொடர்பாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அதில் முதல்முறையாக இந்த குண்டுவெடிப்பை, தற்கொலை படைத் தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காஷ்மீரைச் சேர்ந்த அமீர் ரஷித் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

delhi car blast

இதற்கிடையே அவர் பேசிய தற்கொலை தாக்குதல் தொடர்பான பழைய வீடியோவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் பேசியிருந்த அவர், தற்கொலை குண்டுவெடிப்பு என்பது தியாக நடவடிக்கை எனும் ரீதியில் பேசியிருந்தார். ஃபரிதாபாத் பயங்கரவாதக் குழுவின் மிகவும் தீவிரவாத உறுப்பினரான உமர் அலி, தனிநபர்களை மூளைச் சலவை செய்வதற்காக இந்த வீடியோவை உருவாக்கியதாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், AIMIM தலைவரும் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி அவரது கருத்தைச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர், “நவம்பர் 18 அன்று வெளியான ஒரு புதிய காணொளியில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் உமர், ‘தற்கொலை குண்டுவெடிப்பு என்ற கருத்து இஸ்லாத்தில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்றும் அது ஒரு தியாக நடவடிக்கை’ என்றும் பேசுவதை நான் கேட்டேன். டெல்லி குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள உமர் நபி, தற்கொலை குண்டுவெடிப்பை தியாகம் என்று நியாயப்படுத்தும் தேதியிடப்படாத வீடியோ உள்ளது. மேலும் அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் தற்கொலை ஹராம் மற்றும் அப்பாவிகளைக் கொல்வது ஒரு பெரிய பாவம். இதுபோன்ற செயல்கள் நாட்டின் சட்டத்திற்கும் எதிரானவை. அவை எந்த வகையிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. இது பயங்கரவாதத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ”ஆபரேஷன் சிந்தூர் மற்றும் மகாதேவ் ஆகியவற்றின் போது, ​​கடந்த ஆறு மாதங்களில் உள்ளூர் காஷ்மீரிகள் யாரும் பயங்கரவாதக் குழுக்களில் சேரவில்லை என்று அமித் ஷா நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார். அப்போது இந்தக் குழு எங்கிருந்து வந்தது? இந்தக் குழுவைக் கண்டுபிடிக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு" எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.