அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி pt web
இந்தியா

“அதிஷியை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்” - அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சித் தகவல்

டெல்லி முதலமைச்சர் அதிஷியை போலி வழக்கில் கைது செய்ய சிலர் திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அங்கேஷ்வர்

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடக்கும் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், களத்தில் இருக்கும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பரபரப்பாக தேர்தல் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.

நலத்திட்டங்கள் மூலமாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் ஆம் ஆத்மி உள்ளது. மகாராஷ்டிராவில் லடுக்கி பெஹ்னா யோஜனா திட்டம் ஆளும் பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது; ஆட்சி அமைக்கவும் உதவியது. இதேபோல் நமக்கும் மக்கள் நலத்திட்டங்கள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆம் ஆத்மி உள்ளது.

நடந்து முடிந்த பிற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வென்றது டெல்லியிலும் தொடரும் என்ற நம்பிக்கையில் பாஜக இருந்தாலும், ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை உட்கட்சிப் பூசலை சமாளிக்கவே சரியாக இருக்கிறது.

இந்நிலையில்தான் இன்று காலை எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். அதில், “மஹிலா சம்மன் யோஜனா, சஞ்சீவனி யோஜனா போன்ற திட்டங்களின் காரணமாக இவர்கள் (பாஜக) கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார்கள். அடுத்த சில நாட்களுக்குள் அதிஷியை போலி வழக்கில் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன் மூத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படும். இதுதொடர்பாக இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.