டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது முகநூல்
இந்தியா

“காவல் உதவி ஆணையர் என்னிடம் அத்துமீறி நடந்துக்கொள்கிறார்” - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு புகார்!

Jayashree A

டெல்லி புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராகும்படி ஒன்பதாவது முறையாக கடந்த வாரம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தி அவரை கைதுசெய்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

தொடர்ந்து அவர் நேற்று விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்டார். அப்போது காவல் உதவி ஆணையர் ஏ.கே.சிங் என்பவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கெஜ்ரிவால் இன்று கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த ஏ.கே.சிங், இதற்கு முன் டெல்லியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை தாக்கியதாக (கழுத்தை பின்பக்கம் இருந்து இறுக்கியதாக) கூறப்பட்டவர். மணீஷ் சிசோடியாவும் கெஜ்ரிவால் கைதான அதே வழக்கில் கைதாகியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இந்தப் புகார் கூறப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி, அந்த அதிகாரியை தனது பாதுகாப்பு வளையத்திலிருந்து நீக்குமாறு கெஜ்ரிவால் கோரியுள்ளார்.

முன்னதாக இந்த வழக்கில் கெஜ்ரிவாலை 10 நாள்கள் அமலாக்கப் பிரிவின் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் மற்ற குற்றவாளிகள் போல்தான் அவரையும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியது.

மணீஷ் சிசோடியாவின் புகார்

கடந்த ஆண்டு இதே நீதிமன்ற வளாகத்தில் மணீஷ் சிசோடியாவின் கழுத்தை இறுக்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர், ஏ.கே.சிங் என்ற இக்காவலர். அந்தச் சம்பவம் வீடியோவில் பதிவாகியிருந்தது. அதை சுட்டிக்காட்டி, சிசோடியா எழுத்துப்பூர்வமாக புகார் அளித்திருந்தார்.

அதற்கு டெல்லி போலீசார், “நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. வீடியோவில் காட்டப்பட்டுள்ள செயல் பாதுகாப்புக்கு அவசியப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊடகங்களுக்கு அறிக்கை கொடுப்பது சட்டத்திற்கு எதிரானது” என்று விளக்கம் அளித்திருந்தனர்.