அருணாச்சல் மாநிலத்தின் முன்னாள் அழகியும் பிக்பாஸ் போட்டியாளருமான சம் தராங்க் பற்றி, பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் இழிவான மற்றும் இனரீதியான கருத்துகளைப் பதிவிட்டார். இதையடுத்து அவருக்குக் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சம் தராங்க், "ஒருவரின் அடையாளத்தையும் பெயரையும் அவமதிப்பது கிண்டல் கிடையாது. ஒருவரின் சாதனைகளை கேலிசெய்வது கிண்டல் அல்ல. நகைச்சுவைக்கும் வெறுப்புக்கும் இடையில் கோட்டை வரைய வேண்டிய நேரம் இது. எனக்கு இன்னும் ஏமாற்றமளிக்கும் விஷயம் என்னவென்றால், இது எனது இனத்தைப் பற்றியது மட்டுமல்ல. எனது கடின உழைப்பும், சஞ்சய் லீலா பன்சாலி போன்ற தொலைநோக்கு பார்வையாளரால் ஆதரிக்கப்பட்ட படமும் அவமதிக்கப்பட்டதுதான்" எனக் கவலையுடன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சம் தராங்க் குறித்து இனரீதியான கருத்துகளைப் பதிவிட்டதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருணாச்சலப் பிரதேச மாநில மகளிர் ஆணைய (APSCW) தலைவர் கெஞ்சும் பக்காம், தேசிய மகளிர் ஆணையத்திற்கு (NCW) கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அந்தக் கடிதத்தில், ‘எல்விஷ் யாதவின் கருத்து சம் தரங்கை மட்டுமல்ல, வடகிழக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்தையும் அவமதிக்கிறது. சமூக ஊடகங்களில் எல்விஷ் யாதவின் கருத்து, குறிப்பாக சம் தராங்கின் நற்பெயருக்கும், பொதுவாக வடகிழக்கு பெண்களின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்தது. இத்தகைய நடத்தை மற்றும் இழிவான கருத்துகள், பாலிவுட் திரைப்படத் துறையில் தங்கள் கனவுகளைத் தொடரும் வடகிழக்கு பெண்களிடையே ஒரு பரவலான பயம் மற்றும் மிரட்டல் உணர்வை உருவாக்குகின்றன. அவர்களை பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் ஆக்குகின்றன" என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எல்விஷ் யாதவின் இனவெறி கருத்துக்காக தேசிய ஆணையம் தானாக முன்வந்து வழக்குத் தொடர வேண்டும். சம் தராங்கிற்கும் சமூகத்தின் உணர்வுக்கும் நீதி வழங்க வேண்டும்” என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.