தென்கொரியாவில் ’இனவெறி’| இந்திய யூடியூபர் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்.. பற்றி எரியும் இணையம்!
உலக அளவில் நிறவெறி பிரச்னை என்பது மிகவும் மோசமான ஒன்று. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நிறைவெறி தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று பின்னர் பிளாக் லைவ் மேட்டர் என போராட்டமாக வெடித்தது. இந்தியாவைச் சேர்ந்தவர்களும் பல மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இத்தகைய மோசமான சம்பவங்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
”கொரியர்கள் மிகவும் இனவெறி கொண்டவர்கள்” எனப் பலரும் தங்களுடைய வலைதளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல இந்திய யூடியூபர் ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளார். ’நாடோடி இந்தியன்’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருபவர், தீபன்சு சங்வான். இவர், 1.7 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார். சமீபத்தில், இவர் தென் கொரியாவில் இனவெறி பற்றி தெரிவித்திருக்கும் கருத்து, சமூக ஊடகங்களில் சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது.
தென்கொரியாவிற்கு ஒரு பயணத்தின்போது இனப் பாகுபாட்டை எதிர்கொண்ட தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இதுகுறித்த வீடியோவில் அவர், "நாங்கள் இந்தியர்கள், எங்களுக்கு சிவப்பு நிற தோல் உள்ளது. நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் இந்த வழியில் பிறந்தோம். ஆனால் மறுபுறம், வெள்ளையான நபர்கள் பெரும்பாலும் கொரியர்களால் கவர்ச்சியானவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இதை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவிலும் இனவெறி உள்ளது. ஆனால் அது பாகுபாட்டின் அடிப்படையில் வேறுபடுகிறது. கொரியர்களின் இந்த கலாசாரத்தின் பெரும்பகுதி சீன மரபுகள் மற்றும் பிற தாக்கங்களிலிருந்து வந்துள்ளது. நாம் மற்றவர்களுக்கு அழுக்கான தோற்றத்தைக் கொடுப்பதில்லை. ஆம், ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் சவால்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அது பரவலாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தென்கொரியாவில் இனவெறி பற்றிய தங்கள் சொந்த அனுபவங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் பயனர் ஒருவர், ”தனது நண்பர் சியோலுக்கு 3 மாதங்கள் வேலைக்காகச் சென்றிருந்தபோது, அங்கு மதிய உணவு இடைவேளையின்போது எந்த கொரிய நபரும் தனக்கு அருகில் அமரமாட்டார்கள் என தன்னிடம் தெரிவித்தார்” என அந்த நபர் தெரிவித்துள்ளார்.
அதற்கு மற்றொரு பயனர், அவருடைய இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருப்பதுடன், நான் 11 ஆண்டுகளுக்கு முன்பு சியோலில் பணிபுரிந்தபோது எந்த இனவெறியையும் எதிர்கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அவர், தாய்லாந்தில் இனவெறியைப் பார்த்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இதையடுத்து மூன்றாவது பயனர், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் இதேபோன்ற பிரச்னைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு இறுதியாக ஒருவர், ''உலகம் முழுவதற்கும் இந்தியா மீது இனவெறி பிடித்துள்ளது. வரலாற்றுரீதியாக வெளியாட்களை நாம் வரவேற்பதுபோல் அவர்கள் வரவேற்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.