செய்தியாளர் - M.மீரா
இந்திய விமானப்படையிடம் இருந்த 36 ரஃபேல் போர் விமானங்களில் 4 விமானங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை என்று பிரிட்டன் விமானப் போக்குவரத்து இதழ் வெளியிட்ட தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்று இந்திய விமானப்படையின் முன்னாள் துணைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரான்ஸிடம் இருந்து இந்தியா மொத்தம் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளது. இந்நிலையில், FlightGlobal என்ற பிரிட்டன் விமானப் போக்குவரத்து இதழ் வெளியிட்டுள்ள சமீபத்திய உலக விமானப்படைகள் பட்டியலில், இந்தியாவிடம் 32 ரஃபேல் விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 விமானங்கள் குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ஏர் மார்ஷல் திவாரி, இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்றும், இதுபோன்ற தகவல்களை வழங்கும் ஆதாரங்களின் நம்பகத்தன்மையை அந்த இதழ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறிய ரஃபேல் விமானங்களின் அடையாள எண்கள் பின்னர் சர்வதேச ராணுவப் பயிற்சிகளில் பங்கேற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல், இந்தியாவின் முதல் பெண் ரஃபேல் விமானி ஸ்குவாட்ரன் லீடர் ஷிவாங்கி சிங், பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டதாகப் பரப்பப்பட்ட தகவல்களும் பொய்யானவை என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
கடந்த 2025 மே மாதம் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் 4 ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. தற்போது பிரிட்டன் இதழின் தகவலை மேற்கோள் காட்டி, பாகிஸ்தான் ஊடகங்களும் தங்களது பழைய கூற்றுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், ரஃபேல் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதற்கான நம்பகமான ஆதாரங்களையோ, விமானங்களின் பாகங்களையோ பாகிஸ்தான் இதுவரை வெளியிடவில்லை.
இதற்கிடையே, இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய விமானப்படை வெளியிட்ட ஒப்பந்தக் கோரிக்கையில், தன்னிடம் உள்ள 36 ரஃபேல் விமானங்களுக்கும் தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு உதவிகள் கோரப்பட்டுள்ளன. இது அனைத்து 36 விமானங்களும் விமானப்படையின் கணக்கில் இருப்பதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.