தெலங்கானா முகநூல்
இந்தியா

தெலங்கானா|’கராச்சி’ பேக்கரியின் பெயரை மாற்று.. அடித்து நொறுக்கிய கும்பல் !

இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும்நிலையில், ஐதராபாத்தில் உள்ள கராச்சி பேக்கரியை ஒரு கும்பல் சூறையாடியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஹைதராபாத்தில் 72 ஆண்டுகளாக இயங்கிவரும் புகழ்பெற்ற கராச்சி பேக்கரியை, அதன் பெயரை காரணம் காட்டி காவி கொடியை எடுத்துவந்த கும்பல் ஒன்று அடித்து நொறுக்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இயங்கி வரும் புகழ்பெற்ற கராச்சி பேக்கரி. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கராச்சி, இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியது. இந்தநிலையில்தான், மீண்டும் இந்தியாவிற்கு வர முடிவு செய்த ரம்னாணியா குடும்பத்தினர், கராச்சி நகரில் இருந்து 1953ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள ஹைதராபாத் வந்துள்ளனர். அங்கு ஒரு பேக்கிரியை தொடங்கியுள்ளனர். அவர்கள் பிறந்த இடம் கராச்சி என்பதால் இந்த பேக்கரியின் பெயருக்கு கராச்சி என வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தெரிவித்துள்ள கராச்சி பேக்கரியின் உரிமையாளர், “ எங்கள் தாத்தா கான்சந்த் ராம்னானி 1953 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் கராச்சி பேக்கரியை நிறுவினார். நாங்கள் 72 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் பெருமையுடன் செயல்பட்டு வருகிறோம். 1947 ஆம் ஆண்டு கொந்தளிப்பான பிரிவினையின் போது எங்கள் தாத்தா பாகிஸ்தானை விட்டு வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . இதனால், குடும்பத்துடன் ஹைதராபாத்திற்கு வந்தோம். நாங்கள் பிறந்த இடம் கராச்சி என்பதால் அதனை மறக்கக்கூடாது என்பதற்காக இந்த பெயர் வைக்கப்பட்டது. இது 100 சதவீதம் இந்தியா பிராண்டு” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில்தான், காவி கொடிகளை ஏந்தி வந்த கும்பல் ஒன்று , "பாகிஸ்தான் முர்தாபாத்" மற்றும் "பாரத் மாதா கீ ஜெய்" போன்ற கோஷங்களை எழுப்பி அங்கு வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என்று தகவல் அறிந்த சிலர் கூறுகிறார்கள்.

மேலும், பேக்கரியின் பெயரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பேக்கரியின் அறிவிப்புப் பலகைகளை அடித்து நொறுக்கி உடைத்து சூறையாடலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சம்பவம் நடந்த நேரத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களால் தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முடியவில்லை. பின்னர், நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறை அதிகாரிகள் வந்தநிலையில், இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முன்னதாக, கராச்சி என்ற கடையின் பெயரை மாற்றுபடி, மும்பையில் இதேப்போல சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.