அரபிக்கடலில், மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரிக்கு வடமேற்கே 40 கிலோ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இது, ரத்தினகிரி - டாபோலிக்கு இடையே இன்று பிற்பகல் கரையைக் கடக்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெஞ்சல் புயலைப்போல ஒரே இடத்தில் நிலைத்து நின்று மழையைக் கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாட்டில் 4 மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்பதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்துக்குள் தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.