இந்தூர் தீ விபத்து Pt web
இந்தியா

இந்தூர் | வெடித்துச் சிதறிய மின்சார கார்.. தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.!

இந்தூரில் உள்ள ஒரு மூன்று மாடிக் குடியிருப்புக்கு அருகில் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த மின்சார கார் ஒன்று வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ காரணமாக குடியிருப்பில் இருந்த 8 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

PT WEB

இந்தூரில் மின்சார வாகனம் வெடித்து 8 பேர் உயிரிழந்தனர். மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், 10 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து தீ பரவியது. மின்சாரப்பூட்டு செயலிழப்பு காரணமாக மக்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்தனர். தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விசாரணை நடைபெறுகிறது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் பிரிஜேஷ்வரி அனெக்ஸ் பகுதியில் உள்ள 3 மாடிக் குடியிருப்பிற்கு வெளியே சார்ஜ் ஏறி கொண்டிருந்த மின்சார வாகனம் ஒன்று அதிகாலை 3.30 மணியளவில் மின்கசிவு காரணமாக வெடித்துச் சிதறியது. விபத்தில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த குடியிருப்பில் பரவிய நிலையில், அங்கு சேமிக்கப்பட்டிருந்த 10 எரிவாயு சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்துச் சிதறியது. இதன்காரணமாக தீ மளமளவென குடியிருப்பு முழுவதும் பரவியது. அப்போது, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் தீ பரவியதை அறிந்து வெளியேற முயன்றபோது, தீ விபத்துக் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அக்குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரப்பூட்டு செயலிழந்து விட்டது. இதுவே, 8 பேரின் உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

இந்தூர் தீ விபத்து

அதிகாலை 4 மணியளவில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இத்தீ விபத்தில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் மீட்கப்பட்டிருக்கின்றனர். இக்குடியிருப்பின் உரிமையாளர் மனோஜ் புகாலியா ஒரு பாலிமர் வியாபாரி என்பதால், அந்த வீட்டில் இருந்த பாலிமர் பொருட்கள் காரணமாக வேகமாக பரவியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், இந்தூர் மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்த தீ விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த அம்மாநில அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா, “இந்த தீ விபத்து குறித்து ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும். மின்சார வாகனம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து, இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் அறிவித்துள்ளார்.