நடிகரும் தவெக தலைவருமான விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றிருப்பது குறித்துத் தனக்கு சற்றுப் பொறாமையாக இருப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. பெரும்பான்மை இல்லாத போதிலும் பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய் உள்ளார். கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் விஜய் ஆட்சியை கைப்பற்றியிருப்பது உலக அளவில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து விஜயையும் பக்கத்து மாநிலமான ஆந்திராவில் முன்னணி நடிகராக இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாணையும் ஒப்பிட்டு ஏராளமான சமூக வலைதள பதிவுகள் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பு வெளிவந்தன.
அந்த வகையில், ஆந்திர துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணும் அவ்வப்போது தனது கருத்தைப் பதிவு செய்து வருகிறார்.
அதன்படி, ராஜமுந்திரியில் நடைபெற்ற ஜனசேனா கட்சி கூட்டத்தில் பேசிய அவர், விஜயையோ தவெக கட்சியையோ நேரடியாகக் குறிப்பிடாமல் இவ்வாறு பேசியுள்ளார். ”நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஒரு கட்சி எந்தவித சிரமுமின்றி மிக எளிதாக வென்றிருக்கிறது. கட் அவுட், பேனர்களை பயன்படுத்தி வெற்றி பெற்று, முதல்வராக முடிகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு பொறாமையாகத்தான் இருக்கிறது. நான், 15 ஆண்டுகளாக ஆந்திராவில் தெருதெருவாக அலைந்து களத்தில் நின்று போராடி வருகிறேன்.
ஆனால், என்னால் அதுபோல வெற்றி பெற முடியவில்லை. ஓர் அரசியல் கட்சியை நடத்துவது என்பது லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணைப்பது போன்ற கடினமான காரியம். அரசியல் கட்சியை நடத்த வேண்டுமென்றால், மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். ஏதேனும் பேச வேண்டுமென்றால் அது குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, 'தமிழக முதல்வர் விஜயுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் எனவும் தமிழக அரசியல் சூழல் வேறு. ஆந்திர சூழல் வேறு' எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.