வக்ஃப் வாரியத்தில் பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, இந்த விவாதத்தின்போது வக்ஃப் நிலத்தை அபகரித்ததாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் கடுமையான குற்றச்சாட்டை வைத்திருந்தார்.
இந்த நிலையில், வக்ஃப் திருத்த மசோதா தொடர்பாக, இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது அனுராக் தாக்கூர் கருத்துக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மறுப்பு தெரிவித்துள்ளார். அவர், “என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்து வருகிறது. போராட்டங்கள் நிறைந்தது. ஆனால் நான் எப்போதும் பொது வாழ்வில் உயர்ந்த மதிப்புகளையே நிலைநிறுத்தி வந்துள்ளேன். நேற்று, மக்களவையில் அனுராக் தாக்கூர் என் மீது முற்றிலும் பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்தக் கூற்று உண்மையில் ஆதாரமற்றது. இதுபோன்ற அரசியல் தாக்குதல்களுக்கு நான் அடிபணிய மாட்டேன். அனுராக் தாக்கூரின் இந்தக் குற்றச்சாட்டு, தனது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய கறையை ஏற்படுத்தியுள்ளது. அவர், மன்னிப்பு கேட்க வேண்டும். தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாவிட்டால் நாடாளுமன்றத்தில் அமர அவருக்கு உரிமை இல்லை. அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் அவரது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நான் ராஜினாமா செய்கிறேன். வக்ஃப் நிலத்தின் ஒரு பகுதியையாவது நானோ அல்லது என் குழந்தைகளோ ஆக்கிரமித்துள்ளதாக அவர் நிரூபித்தால், நான் ராஜினாமா செய்கிறேன். இதற்கெல்லாம் நான் பயப்படவில்லை” என கர்ஜித்தார்.
இதுதொடர்பாகப் பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, “உங்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருக்கிறோம்” என சமாதானப்படுத்தினார். தொடர்ந்து, “இதுபோன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்” மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.