பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. எனினும், தொடர்ந்து பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமான தகவல்களைச் சேகரித்து வருகிறது. இந்தச் சூழலில், இந்தியாவைச் சேர்ந்த சிலரே, உளவாளிகளாகச் செயல்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உட்பட வட இந்திய மாநிலங்களில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில், ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு உளவு கூறும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக மேலும் ஒரு யூடியூபரை பஞ்சாப் காவல் துறை கைது செய்துள்ளது. ஜஸ்பீர் சிங் என்ற அந்த நபர், ‘ஜான் மஹால்’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதற்கு 11 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-இல் பணியாற்றும் ஷகிர் என்ற இந்திய வம்சாவளி நபருடன் ஜஸ்பீர் சிங் தொடர்பில் இருந்ததாகவும் 3 முறை பாகிஸ்தான் சென்று வந்ததாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தியாவில் உளவு பார்த்ததாக வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடனும் ஜஸ்பீர் சிங் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. மேலும் ஜஸ்பீர் சிங்கின் செல்போனிலும் பாகிஸ்தானில் உள்ள சிலரின் தொடர்பு எண்கள் இருந்ததும் தெரியவந்ததாகவும் காவல் துறை கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு உளவு கூறிய குற்றச்சாட்டில் கைதான பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடனும் ஜஸ்பீர் சிங் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.