விணுதா கோட்டா, ஸ்ரீனிவாசலு புதிய தலைமுறை
இந்தியா

கூவம் ஆற்றோரம் கிடந்த இளைஞர் சடலம்.. விசாரணையில் தோண்ட தோண்ட ஆந்திராவின் பகீர் அரசியல்!

பயந்து போன கணவன் மனைவி சக கட்சி நண்பர்கள் மற்றும் வீட்டு கார் ஓட்டுநர் உதவியுடன் காரில் உடலை வைத்து சென்னை கொண்டு வந்து கூவம் ஆற்று கரையோரமாக வீசி விட்டு தப்பி விட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

ஜெ.அன்பரசன்

சென்னை கூவம் ஆறு 4 வது நுழைவு வாயில் எம்.எஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறத்தில் கடந்த 8 ஆம் தேதி 25 வயதுடைய ஆண் சடலம் கிடந்தது. தகவல் அறிந்த ஏழுகிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் இறந்து கிடந்த நபர் திருப்பதியை சேர்ந்த ஸ்ரீனிவாசலு (எ) ராயுடு (22) என்பது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது காரில் வந்த ஒரு கும்பல் ஸ்ரீனிவாசலுவை கூவம் ஆற்றங்கரையில் தூக்கி வீசி தப்பி சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கார் எண் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா கட்சியின் ஐ.டி விங் நிர்வாகி சிவக்குமார், ஜனசேனா கட்சியின் காளஹஸ்தி தொகுதி நிர்வாகி விணுதா கோட்டா, அவரது கணவர் சந்திரபாபு, உதவியாளர் கோபி, கார் ஓட்டுநர் ஷேக் தாசன் ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வினுதா ஜனசேனா கட்சியில் காளாஸ்திரி தொகுதியில் பிரதிநிதியாக உள்ளார் என்பதும், கொலை செய்யப்பட்ட ஸ்ரீனிவாசலு (எ) ராயுடு கடந்த 2019 ஆண்டு முதல் இவரது வீட்டில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர் விசாரணையில், ஜனசேனா நிர்வாகி விணுதா கோட்டா படுக்கை அறையில் உடை மாற்றும் போது கட்டிலுக்கு அடியில் செல்போன் ஒன்றை கண்டெடுத்ததும், அது ராயுடு உடையது என்பதும் தெரிந்தது. செல்போனை சோதனை செய்து பார்த்தபோது அதில் விணுதா கோட்டோ உடை மாற்றும் காட்சி பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விணுதா கோட்டா மற்றும் அவரது கணவர் சந்திரபாபு ஆகியோர் சீனிவாசலில் என்கிற ராயுடுவை அடித்து விசாரித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. விணுதா கோட்டா மற்றும் அவரது கணவர் சந்திரபாபு ஆகியோர் ராயுடுவை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

அப்போது, காளாஸ்திரி தொகுதி MLA.,வான "தெலுங்கு தேச கட்சியைச்" சேர்ந்த பஜாலா சுதீர் ரெட்டி என்பவர் தான் பணம் கொடுத்து தங்கள் கட்சி ரகசியம் மற்றும் செயல்பாடுகளை கூற சொன்னதாகவும், அவரின் தூண்டுதலின் பேரில் தனது மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாகவும் ராயுடு கூறியதால் கணவன் மனைவி இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இது குறித்து கட்சி தலைமையிடம் விணுதா புகார் அளித்துள்ளார். கட்சி தலைமை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராயுடுவை வேலைக்கு வேண்டாம் என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

கைதானவர்கள்

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா கட்சியை சேர்ந்த விணுதாவிற்கு சீட் வழங்கப்பட்டு பின்பு கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் பஜாலா சுதீர் ரெட்டி என்பவருக்கு சீட் வழங்கப்பட்டு தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதனால், ராயுடு மீது ஆத்திரத்தில் இருந்த விணுதாவும் அவரது கணவரும் அவரை சட்டவிரோதமாக தனது வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி கழிவறைக்கு சென்று விட்டு ஒரு மணி நேரம் ஆகியும் வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்த போது ராயுடு தனக்குத் தானே கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கைதான விணுதா, சந்திரபாபு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பயந்து போன கணவன் மனைவி சக கட்சி நண்பர்கள் மற்றும் வீட்டு கார் ஓட்டுநர் உதவியுடன் காரில் உடலை வைத்து சென்னை கொண்டு வந்து கூவம் ஆற்று கரையோரமாக வீசி விட்டு தப்பி விட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

கைதானவர்கள்

இதையடுத்து ஏழுகிணறு போலீசார் ஆந்திரா போலீசாருடன் கலந்தாலோசித்து வருகின்றனர். சித்ரவதை செய்த இடத்திற்கு சென்று விசாரிக்கவும் ஆய்வுசெய்யவும் போலீசார் விரைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்மள் சந்திப்பில் ஸ்ரீனிவாசலு கொலை செய்யப்பட்டதாகவும், கொலஒ செய்த ஜனசேனா கட்சியை சேர்ந்த நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து ஏழுக்கிணறு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.