திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த ஆந்திர அரசு தயாராகி வருகிறது. இதற்காக, பொற்கோயிலைப் போலவே ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளது.
உலகப் புகழ்பெற்ற ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குத் தினமும் லட்சக்கணக்கானப் பக்தர்கள் செல்கின்றனர். இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, திருமலை திருப்பதி தேவஸ்தானங்களுக்கு ஒரு சிறப்புச் சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது அமிர்தசரஸ் பொற்கோயிலை நிர்வகிக்கும் சட்டத்தைப் போன்றது. பல அறிக்கைகளின்படி, முன்மொழியப்பட்ட சட்டம் கோயில் விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகரித்த அதிகாரங்களை வழங்கும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானங்களுக்கு கலப்பட நெய் விநியோகிக்கப்படுவதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அரசாங்கம், பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை சமரசம் செய்யும் எந்தவொரு செயலையும் பொறுத்துக்கொள்ளாது என்று வலியுறுத்தியது.
அதன்படி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் ஸ்கேனிங் மையம் அருகே உள்ள புத்தகத்தில் கையெழுத்திட்ட பிறகுதான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், இதேபோல் இந்து மதத்தை சாராத மாற்று மதத்தினர்கள் தரிசனம் செய்ய விரும்பினால் கட்டாயம் அவர்கள் இந்து கடவுளை நம்புகிறோம். இந்து கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் பொட்டு வைத்துக் கொள்கிறோம் என உறுதிமொழி கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அதே போல் தரிசனத்திற்கு செல்லும் மாற்று மதத்தினர் கட்டாயம் நெற்றியில் நாமம் போட்ட பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. திருமலை கோயிலின் புனிதத்தைப் பாதுகாக்க ஆந்திர அரசு இந்த உத்தரவுகளை பிறப்பித்தது. இதற்கிடையே, பொற்கோயில் சட்டத்தை ஆய்வு செய்த பிறகு, அரசாங்கம் சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தும். மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, புதிய சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.