vantara pt web
இந்தியா

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு பராமரிப்பகத்தில் விதிமீறல்.. புலனாய்வுக் குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் குஜராத்தில் உருவாக்கிய வனவிலங்கு பராமரிப்பு மற்றும் புனர்வாழ்வு பூங்கா பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அங்கு நடந்த விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

PT WEB

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் குஜராத்தில் உருவாக்கிய வனவிலங்கு பராமரிப்பு மற்றும் புனர்வாழ்வு பூங்கா பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அங்கு நடந்த விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

குஜராத்தின் ஜாம் நகரில் அமைந்துள்ளது வன்தாரா என்ற விலங்குகள் பராமரிப்பகம். வனங்களின் நட்சத்திரம் என்ற இந்த பூங்காவை முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் உருவாக்கி நிர்வகித்து வருகிறது. பல வகை விலங்குகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அளித்து மறுவாழ்வு அளிப்பதே இப்பூங்காவின் பிரதான நோக்கம்.

3 ஆயிரம் ஏக்கர் பரப்புகொண்ட இப்பூங்காவில் விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், அறுவை சிகிச்சை அரங்கங்கள் போன்ற வசதிகள் உள்ளன. உடல் ஆரோக்கியத்திற்காக விதவிதமான உணவுகளும் விலங்குகளுக்கு உண்டு. அழிந்து வரும் விலங்கு இனங்களை இனப்பெருக்கம் செய்யும் திட்டமும் இங்குண்டு.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விலங்குகள் இங்கு கொண்டு வரப்பட்டு சிறப்பான மருத்துவம் தரப்படுகிறது. ஆனால், இதுதான் இப்பூங்காவை பெரும் சிக்கலில் தள்ளியுள்ளது. விலங்குகளை கொண்டு வருவதில் உரிய விதிகள் கடைபிடிக்கப்படுவது இல்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகின. யானைகள் கோயில்களில் இருந்து வலுக்கட்டாயமாக கொண்டு வரப்பட்டதாகவும் புகார்கள் உள்ளன. இனப்பெருக்கம் என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து அரிய வகை பறவைகள் கடத்தி வரப்பட்டன என்றும் புகார்கள் உள்ளன.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் வன்தாரா பூங்கா மீதான விதிமீறல் புகார்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இக்குழு வரும் 12ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.