தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, தனது 30 வது பிறந்தநாளையொட்டி, ஹனுமன் மந்திரத்தை கூறியவாறு ஜாம்நகரிலிருந்து துவாரகா கோயில் நோக்கி 140 கி.மீ பாதயாத்திரை சென்றுவருகிறார். இந்த நடைப்பயணத்தின் போது Z பாதுகாப்பும், உள்ளூர் காவல் துறையினரும் இவருக்கு தொடர்ந்து பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர் .
இந்தநிலையில்தான், இந்த நடை பயணத்தின் 5ம் நாளன்று இவர் மமிடி பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு பெரிய வண்டியில் 250 கோழிகளை இறைச்சிக்காக கொண்டு செல்வதை அறிந்ததும் அவர் அதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
அதை கண்ட அவர் உடனடியாக அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி கோழிகளை கொண்டு சென்ற அந்த வண்டி உரிமையாளரிடம் பேசி, வண்டியில் இருக்கும் அனைத்து கோழிகளையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாராம். இதற்காக தனது ஊழியர்களிடம் எல்லா கோழிகளுக்குரிய பணத்தையும் இரண்டு மடங்காக கொடுத்து அவற்றை மீட்கும்படி கூறியுள்ளார்.
மேலும், மீட்ட கோழிகளை தனது வன உயிரின புணர் வாழ்வு மையமான வந்தாராவுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது . விலங்கு பாதுகாப்பு மற்றும் பசுமை சூழலை காக்கும் நோக்கத்தில் ஆன்ந்த் அம்பானியால் உருவாக்கப்பட்டதுதான் வந்தாரா என்ற மையம் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய அரசின் பிராணி மித்ரா என்ற தேசிய விருதை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மற்றொரு புறம், உயிரினங்களை பாதுகாப்பது சரியான விஷயம்தான். ஆனால், இறைச்சிக்காக உள்ள உயிரினத்தையும், குறைந்த விலையில் உடலுக்கு தேவையான புரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் எளிய மக்களுக்கும் கிடைக்கும்படி இருக்கும் இதுபோன்ற உணவுகளையும், ‘ பாதுகாப்பு’ என்ற பெயரில் தடுத்து நிறுத்துவதும் கிடைக்கவிடாமல் செய்வதும் எப்படி பாராட்டுக்குரியதாகும்? இவரது செயல்கள் இதுபோன்ற எதிர்வினைகளைதான் பிற்காலத்தில் ஏற்படுத்தும். உங்களால் பாதாம், பிஸ்தா, வால்நட் என அதிக விலையில் இருக்கும் எல்லாவற்றையும் நொடிப்பொழுதில் வாங்கி ஊட்டசத்து குறைபாடு இல்லாதவர்களாக வாழ முடியும். இதை வாங்குவது எல்லா தரப்பு மக்களுக்கும் சாத்தியமா? .. என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.