அமித் ஷா
அமித் ஷா கோப்புப்படம்
இந்தியா

“சக்திக்கு மீறிய தேர்தல் வாக்குறுதிகள்... மாநிலங்களுக்கு உதவ இயலாது” - அமித் ஷா

PT WEB

சக்திக்கு மீறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு செலவிற்கு நிதியின்றி தத்தளிக்கும் மாநில அரசுகளுக்கு உதவ இயலாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஆங்கில தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில அரசுகளுக்கு நிதி பங்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக எழுந்த புகார்களுக்கு பதிலளித்தார். அப்போது அவர், “15வது நிதிக்குழு மூலமாக மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் எந்த பாரபட்சமும் இல்லை என்பதை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

ஆனால் சில மாநில அரசுகள் தங்கள் சக்திக்கு மீறிய தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க கூட நிதியின்றி திணறுகின்றனர். ஆகவே இது போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ இயலாத நிலை உள்ளது.

மேலும் நிதிச்சூழலுக்கு ஏற்ப வளர்ச்சித்திட்டங்கள், சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவதே சரியான நடைமுறை. அதைத்தான் மத்திய அரசும் செய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.