திரிணமூல் காங்கிரஸ் எழுப்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னை பூதாகரமாக வெடித்திருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள், குறிப்பாக ஏழை முஸ்லிம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் சட்டவிரோத வங்காளதேச குடியேறிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டியிருக்கும் திரிணமூல் காங்கிரஸ் ஒரு மாதமாக அதற்காக குரல் எழுப்பி வருகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டு சிறையில் தள்ளப்படுகின்றனர் என குற்றம்சாட்டியிருக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவர்களை காப்பதற்காக மொழி போராட்டத்தையும் தொடங்கியிருக்கிறார்.
இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநிலமெங்கும் கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் கொல்கத்தாவில் ஒரு பேரணியையும் நடத்தப்பட்டது.
கடந்த திங்கள் அன்று கூட, மாநிலத்திற்குத் திரும்ப விரும்பும் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று கூட தெரிவித்திருந்தார். இது தொடர்பாகப் பேசியிருந்த அவர், “தொழிலாளர்கள் மும்பை, உ.பி. அல்லது ராஜஸ்தானில் தங்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு பிடா அல்லது பாயாஸ் (வங்காள இனிப்புகள்) கொடுக்க முடியாமல் போகலாம், ஆனால், நாங்கள் ஒரு ரொட்டி சாப்பிட்டால், உங்களுக்கும் ஒன்று கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
நீங்கள் இங்கே நிம்மதியாக வாழலாம், உங்களிடம் போலீஸ் ஹெல்ப்லைன் எண் உள்ளது. எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், நீங்கள் திரும்பி வர விரும்பும்போது எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாங்கள் உங்களை ரயிலில் அழைத்து வருவோம். நாங்கள் உங்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவோம், உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்போம்” எனவும் தெரிவித்திருந்தார்.
மறுபுறம், பாஜக இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, கடந்த 14 ஆண்டுகளாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனைப் பற்றி டி.எம்.சி சிந்திக்கவில்லை என்றும், அடுத்த ஆண்டு மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையை எழுப்புகிறது என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில்தான் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கருத்தொன்றைத் தெரிவித்திருக்கிறார். சாந்திநிகேதனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒருவர் வங்காளியாக இருந்தாலும் சரி, பஞ்சாபியாக இருந்தாலும் சரி, மார்வாடியா இருந்தாலும் சரி, எங்கு வேண்டுமானாலும் சென்று எந்த மொழியையும் பேசும் சுதந்திரம் அவரது அரசியலமைப்பின் உரிமை” எனத் தெரிவித்திருக்கிறார்.
“நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் செல்வதற்கான சுதந்திரம் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு; நமது அரசியலமைப்பில் பிராந்திய உரிமைகள் பற்றிய எந்தவிதமான குறிப்பிடலும் இல்லை. அதைத் தடுக்கும் எந்த முயற்சியும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியாக இருக்க உரிமை உண்டு. நாம் அனைவரையும் மதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், “இது வங்காளத்தின் மட்டும் பிரச்சினை அல்ல, முழு நாட்டின் பிரச்சினை” எனவும் தெரிவித்திருக்கிறார்.