குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். அகமதாபாத் விமான விபத்து சம்பவமே இன்னும் மக்களைவிட்டு விலகாத நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விமானம் குறித்த அசெளகர்ய தகவல்கள் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த ஜூன் 17ஆம் தேதி மட்டும் ஏர் இந்தியாவின் ஆறு சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஆறு நாட்களில் மட்டும் 83 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமான சேவையை அடுத்த சில நாள்களுக்கு 15 சதவிகிதம் வரை குறைக்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம், “ஏர் இந்தியா சர்வதேச சேவைகளை 15 சதவிகிதம் வரை குறைக்கவுள்ளது. விமானச் செயல்பாடுகளின் நம்பகத்தன்மையை மற்றும் சிறந்த செயல்திறனை உறுதி செய்வதற்கும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஏர் இந்தியாவின் போயிங் 787-8/9 ரக விமானங்களில் பாதுகாப்பு ஆய்வு நடத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 33 விமானங்களில், 26 விமானங்களின் ஆய்வுகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விமானங்களின் ஆய்வு விரைவில் நடைபெறும். கூடுதலாக போயிங் 777 ரக விமானங்களையும் ஏர் இந்தியா பாதுகாப்பு ஆய்வு நடத்துகிறது.
இதையடுத்து, பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க ஏர் இந்தியா எதிர்கொள்ளும் சிக்கலான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அடுத்த சில வாரங்களுக்கு சர்வதேச பெரிய சேவைகளை 15 சதவிகிதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குறைப்பு நடவடிக்கை ஜூன் 20 முதல் (நாளை) குறைந்தபட்சம் ஜூலை பாதி வரை தொடரும். சேவை குறைப்பால் பாதிக்கப்படும் பயணிகளிடம் ஏர் இந்தியா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா மேற்கொள்ளும். திருத்தப்பட்ட புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.