ஏர் இந்தியா நிறுவனம் மே 1 முதல் புதிய உடற்தகுதி விதிகளை அறிமுகப்படுத்துகிறது. பி.எம்.ஐ 18.5-24.9 இடையே இருக்க வேண்டும். குறைந்த அல்லது அதிக எடை கொண்டவர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்படுவர். பி.எம்.ஐ 30 அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவர். 30 நாட்களில் எடை குறையாவிட்டால் எச்சரிக்கை கடிதம் வழங்கப்படும்.
செய்தியாளர் - இனியா
டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் Air India நிறுவனம், தனது விமானப் பணியாளர்களுக்கான உடற்தகுதி மற்றும் ஆரோக்கிய விதிகளை மே 1-ம் தேதி முதல் முறைப்படி அமல்படுத்துகிறது. புதிய கேபின் குரூ ஹெல்த் அண்ட் ஃபிட்னஸ் காம்ப்ளையன்ஸ் பாலிசி (Cabin Crew Health and Fitness Compliance Policy) என்ற இந்தத் திட்டத்தின்படி, பணியாளர்களின் Body Mass Index எனப்படும் உடல்நிறை குறியீடு இனி அவர்களின் பணி ஒதுக்கீடு மற்றும் ஊதியத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
இந்த விதிகளின்படி, பி.எம்.ஐ அளவு 18.5 முதல் 24.9-க்குள் இருப்பது சாதாரண மற்றும் விரும்பத்தக்க அளவாகக் கருதப்படுகிறது. பி.எம்.ஐ அளவு 18-க்குக் கீழ் இருந்தால் அவர்கள் குறைந்த எடை கொண்டவர்களாகவும், 25 முதல் 29.9 வரை இருந்தால் அதிக எடை கொண்டவர்களாகவும் வகைப்படுத்தப்படுவர். இந்த இரண்டு பிரிவினரும் விமானப் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு, சிறப்பு மருத்துவ மற்றும் செயல்பாட்டு மதிப்பீடுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மீண்டும் பணிக்கு அனுமதிக்கப்படுவர். ஒருவேளை அவர்கள் இந்தத் தேர்வுகளில் தோல்வியடைந்தால், தகுதி பெறும் வரை அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாது.
பி.எம்.ஐ அளவு 30 அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் உடல் பருமன் உடையவர்களாகக் கருதப்பட்டு, அவர்கள் எவ்விதச் சூழலிலும் விமானப் பணிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவர்கள் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு ஊதியமில்லா விடுப்பில் வைக்கப்படுவர். இவர்களுக்கு எடையைக் குறைக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அந்த காலக்கெடுவுக்குள் முன்னேற்றம் இல்லையெனில் முறையான எச்சரிக்கை கடிதம் வழங்கப்படும். அடுத்த 30 நாட்களிலும் தகுதியை எட்டத் தவறினால் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மேலதிக ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும், உடல் பருமன் பிரிவில் உள்ள பணியாளர்கள் அடுத்த 7 நாட்களுக்குள் இரத்தச் சர்க்கரை (Blood Sugar) மற்றும் கொழுப்புச் சத்து பரிசோதனைகளைச் செய்து அதன் மூலம் ஏதேனும் உடல்நல அபாயங்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பி.எம்.ஐ சோதனைகள் பயிற்சியின் போதும், பாதுகாப்பு நடைமுறைகளின் போதும், மற்றும் விமானப் பயணங்களுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து நடத்தப்படும். ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
பழைய பணியாளர்கள் மற்றும் தற்போது பயிற்சியில் இருக்கும் புதிய ஊழியர்கள் என அனைவருக்கும் இந்தப் புதிய விதிகள் பொருந்தும். விமானப் பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவசர காலங்களில் ஊழியர்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவதை உறுதிப்படுத்தவுமே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.