’முதல்முறை அரிதான சம்பவம்..’ சீனாவில் Robo கைது..? மூதாட்டியிடம் செய்த செயல்!
சீனாவில் 70 வயது மூதாட்டியை அச்சுறுத்திய ரோபோவை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ரோபோக்களை கையாளக் கூடாது என உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் - விக்னேஷ்
ரோபோக்கள் பயன்பாடு தற்போது பரவலாக அதிகரித்து வரும் சூழலில், அது தொடர்புடைய ஆபத்துகளும் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் ரோபோக்களின் பயன்பாடு வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் ரோபோக்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
முக்கியமாக, ரோபோக்களை மக்கள் மத்தியில் நடமாட விட்டு அதனை பழக வைப்பதாக கூறப்படுகிறது. அந்நாடுகளின் இராணுவம் போன்ற முக்கிய துறைகளிலும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது தொடர்பான காட்சிகளும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
அச்சுறுத்தும் செயல்.. ரோபோ கைது!
இந்த நிலையில் தான், சீனாவின் மக்காவ் மாகாணத்தில் 70 வயது மூதாட்டி ஒருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் ரோபோவை, அந்நாட்டு காவல்துறையினர் அங்கிருந்து அழைத்துச் சென்ற சம்பவம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
திடீரென மூதாட்டி அச்சமடைந்து சத்தமிட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த ரோபோவின் தோளில் கை வைத்து, ஒரு குற்றவாளியை அழைத்துச் செல்வது போல அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.
அந்த ரோபோ ஒரு கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ரோபோக்களை கையாளக் கூடாது என அதன் உரிமையாளருக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் "ரோபோ கைது செய்யப்பட்டது" என்ற பெயரில் வைரலாகி வருகிறது
இது விளையாட்டாகத் தோன்றினாலும் கூட ரோபோக்களால் எந்தளவுக்குக் குழப்பம் ஏற்படலாம் என்பதையே இது உணர்த்துகிறது. பொது இடங்களில் முறையான கண்காணிப்பு இல்லாமல் ரோபோக்களை அனுமதிக்கக்கூடாது என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். எதாவது எமர்ஜென்சி என்றால் ஒரே நொடியில் ரோபோவை ஆஃப் செய்யக்கூடிய ஸ்விட்ச்கள் வேண்டும் என்றும் அதுபோன்ற ஸ்விட்ச் இருக்கும் ரோபோக்களை மட்டுமே பொதுவெளியில் அனுமதிக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

