ஹாங்காங்கில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் (AI 315) இன்று மதியம் டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இது ஏர்பஸ் A321-251NX (VT-TVG) ரக விமானமாகும்.
இந்த விமானம் இன்று மதியம் 12.20 மணியளவில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மதியம் 12:12 மணியளவில் தரையிறங்கியது. தரையிறங்கிய பின் பயணிகள் இறங்கத் தொடங்கினர். அப்போது, அதன் துணை மின் அலகில் (APU) தீப்பிடித்ததால் விமானத்தின் வால் பகுதியிலும் தீப்பிடித்தது. விமானத்தின் டிசைனின் படி APU தானாகவே ஷட் டவுன் ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீ விபத்து காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. ஆயினும், பயணிகளும் விமான ஊழியர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த விபத்து குறித்து வெளியிட்ட அறிக்கையில், “ஜூலை 22, 2025 அன்று, ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு இயக்கப்பட்ட விமானம் AI 315, தரையிறங்கியபின் பார்க்கிங் கேட்டில் நிறுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் APU தீப்பிடித்தது. பயணிகள் இறங்கத் தொடங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. விமானத்தில் மட்டுமே சில சேதங்கள் ஏற்பட்டது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் வழக்கம் போல் இறங்கி பாதுகாப்பாக இருக்கின்றனர். ஒழுங்குமுறை ஆணையத்திற்கு இந்த விவகாரம் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார்.
ஏர் இந்திய விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகள், குறைபாடுகளால் தொடர்ச்சியாக விவாதத்திற்கு உள்ளாகிக்கொண்டே இருக்கின்றன. நேற்று டெல்லியில் இருந்து கொல்கத்தாவிற்குச் சென்ற விமானத்தில் தொழிற்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதன் காரணமாக நிறுத்தப்பட்டது.
அந்த விமானத்தில் 160- பயணிகள் இருந்தனர். இதைத்தாண்டி, கொச்சியில் இருந்து வந்த AI 2744 எனும் விமானம் மும்பையில் தரையிறங்கிய பிறகு ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது. இதனால் விமானத்தில் ஒரு என்ஜினில் சில பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த இரு சம்பவங்களிலும் பயணிகள் பாதுகாப்பாகவே இருந்தனர். ஆனாலும், பயணிகளுக்கு ஏர் இந்திய விமானங்கள் தொடர்ச்சியாக அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அளித்துக்கொண்டே இருக்கின்றன.