குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியும் ஏஏஐபி வசம் உள்ளது. இடையில் அதில் இருக்கும் டேட்டாவை எடுக்க அது வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், அதை மறுத்துள்ள மத்திய அரசு, உள்நாட்டிலேயே விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது. இதற்கிடையே நாசவேலை உட்பட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளீதர் மொஹோல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை, ஜூலை 11ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு முதல் ஐந்து பக்கங்கள் நீளமாக இருக்கும் இந்த ஆவணம், விபத்துக்கான ஆரம்ப நுண்ணறிவுகளை, சாத்தியமான காரணங்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, வானிலை பற்றிய விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
விபத்து பற்றிய விவரங்களும், பொறுப்பான புலனாய்வாளரின் பெயரும் அறிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும், இந்த ஆவணம் அடுத்த நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்லும் எனவும் கூறப்படுகிறது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) வழிகாட்டுதல்களின்படி, விபத்து நடந்த 30 நாட்களுக்குள் இந்தியா ஒரு முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.