வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா  pt
இந்தியா

வக்ஃப் திருத்த மசோதா | ”இது ஒரு கருப்பு சட்டம்” - முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு!

வக்ஃப் திருத்த மசோதா ஒரு கருப்பு சட்டம் எனக் கூறியுள்ள அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்டவாரியம் அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ளது.

Prakash J

வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது.

மேலும், மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து அந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வக்ஃப் வாரிய சட்ட வரைவில் 14 மாற்றங்களுடன், நாட்டில் முஸ்லிம் தொண்டு சொத்துக்கள் நிர்வகிக்கப்படும் விதத்தில் வக்ஃப் திருத்த மசோதாவுக்கு கூட்டு நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 30 அன்று, ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பரிந்துரைத்த 14 திருத்தங்களை நாடாளுமன்ற குழு ஏற்றுக் கொண்டது. இந்த நிலையில், வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று (ஏப்.2) தாக்கல் செய்யப்பட்டது.

வக்ஃப், நாடாளுமன்றம்

வக்ஃப் மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இது இஸ்லாமிய சமூகத்தினரின் நலன்களை கருத்தில்கொண்டு வரப்பட்டது எனக்கூறினார். வக்ஃப் வாரியத்திற்கு நாடெங்கும் உள்ள நிலங்களை திறம்பட நிர்வகிப்பதே அரசின் திட்டம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் இது இஸ்லாமியர்களின் சொத்துகளை பறிப்பதற்கானது எனக் கூறப்படுவது தவறு என்றும் கூறினார். 2014ஆம் ஆண்டில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் நாடாளுமன்றத்திற்கான நிலத்தையும் விமான நிலைய நிலங்களையும் கூட வக்ஃப் வாரியத்திற்கு காங்கிரஸ் அரசு அளித்திருக்கும் என கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டினார். எனினும், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில், வக்ஃப் திருத்த மசோதா ஒரு கருப்பு சட்டம் எனக் கூறியுள்ள அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்டவாரியம் அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தினரின் சொத்துகளை பறிப்பதே மத்திய அரசின் நோக்கம் என முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர் முகமது அதீப் தெரிவித்தார். திருத்தப்பட்ட சட்டம் இந்தியாவின் கட்டமைப்பையே சீர்குலைக்கும் என்பதால் இதை எதிர்த்து நாடு முழுக்க போராட்டம் நடத்த உள்ளதாகவும் முகமது அதீப் கூறினார். அரசின் சட்டத்தில் உள்ள குறைகளை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் எடுத்துக்கூறியும் எந்த பலனும் இல்லை என தனி நபர் சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினர் மவுலானா காலித் ரஷி ஃபரங்கி மகாலி தெரிவித்தார்.