செய்தியாளர் - ராஜ்குமார்.ர
AI... இன்று பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு உதவி செய்து வருகிறது. தகவல்களைத் தேடுவது முதல் பல்வேறு வேலைகளை எளிதாக்குவது வரை AI-யின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால், இதே AI-யைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் தயாரித்ததாக ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தனா மற்றும் பிஞ்சனா கிராமங்களில், கள்ளச்சாராயம் குடித்ததாகக் கூறப்படும் சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கில், கள்ளச்சாராயம் தயாரித்ததாக இந்தூரைச் சேர்ந்த 26 வயதான அஜய் ரத்தோர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டிலேயே சாராயம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து செப்டம்பர் மாதம் முதல் AI கருவிகளைப் பயன்படுத்தித் தகவல்களைத் தேடியதாகக் கூறப்படுகிறது. AI மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இணையத்தில் ரசாயனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களைத் தேடி, அவற்றில் ஒரு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு ரசாயனங்களைப் பெற்றுள்ளார். இதையடுத்து, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கள்ளச்சாராயம் தயாரித்ததாகப் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அஜய் இந்தச் சாராயத்தை நேரடியாக விற்பனை செய்யாமல், பழைய மதுபான பாட்டில்களில் நிரப்பியுள்ளார். அதுமட்டுமின்றி, உண்மையான மதுபானங்களுடன் இந்தப் போலி மதுபான பாட்டில்களையும் கலந்து, கிராமப்புறங்களில் விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், அஜயிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் போலி மதுபான மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட உள்ளன. இந்த ஆய்வின் மூலம், மதுபானத்தில் என்னென்ன பொருட்கள் கலந்திருந்தன என்பதைக் கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், இந்தக் கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் 13 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவங்களுக்கும், இந்தக் கள்ளச்சாராயக் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், உயிரிழப்புகளுக்கும் இந்தக் கள்ளச்சாராயத்திற்கும் இடையிலான தொடர்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், AI போன்ற தொழில்நுட்பங்களைத் தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தும்போது ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் இந்தச் சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒருபுறம் தொழில்நுட்பம் பல்வேறு நன்மைகளை வழங்கி வரும் நிலையில், அதைத் தவறாகப் பயன்படுத்துவது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.