குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். இந்த விபத்தின் மூலம் பலருடைய நம்பிக்கைகளும், கனவுகளும் சிதைந்து போயுள்ளன. இந்த விபத்தில் பலியானவர்களின் விமானப் பணிப் பெண்ணான ரோஷ்னி சோங்காரேவும் ஒருவர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகிலுள்ள டோம்பிவ்லியில் உள்ள ராஜாஜி சாலையில் தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தவர் ரோஷ்னி சோங்காரே (26). இவர், விமானப் பணிப்பெண் ஆவதற்குரிய படிப்பை முடித்தபிறகு, வேறொரு விமான நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் ஏர் இந்தியாவில் சேர்ந்தார். அடுத்து, சர்வதேச பணிகளை விரும்பியுள்ளார். அதன் ஒருபகுதியாக அவர் அகமதாபாத்திலிருந்து லண்டன் செல்லவிருந்த AI-171 என்ற விமானத்தில் 12 பேர் கொண்ட குழுவில் இணைந்தார். இதற்காக, அவர் உற்சாகமாக வீட்டைவிட்டு வெளியேறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தவிர, அவர் தனது வீட்டின் இதயத்துடிப்பாகவும், சமூக ஊடகங்களிலும் மிகவும் பிரபலமாகவும் இருந்துள்ளார். அவரை, இன்ஸ்டாவில் 73,000க்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றனர். இதற்கிடையே, குடும்பத்தில் அறிமுகமான ஒருவர்மூலம் வணிகக் கடற்படை அதிகாரி ஒருவரை அவர் சந்தித்ததாலும், இந்த ஆண்டு இறுதியில் அவருடன் நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாலும் குடும்பத்தினர் மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால் எல்லாமே தற்போது நொறுங்கிப் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கல்யாணக் கனவுகளுடன் மேலும் உயரப் பறக்க வேண்டியவர், ஒரு நொடியில் நிகழ்ந்த விமான விபத்தால் கருகிப் போய் தன்னுடைய இதயத் துடிப்பையும் நிறுத்திக் கொண்டுவிட்டார்.