செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முகநூல்
இந்தியா

AI Deep Fake Videos குறித்து பரவும் அச்சம்... செயற்கை நுண்ணறிவு நிபுணர் சொல்வதென்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பாக வெளியான சர்ச்சைக்குரிய காணொளியை தொடர்ந்து AI தொழில்நுட்பத்தின் மீதான அச்சம் மக்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. AI வந்தாலே இப்படித்தான் எனும் ரேஞ்சுக்கு, பலரும் இதை திட்டிவந்தாலும்கூட, இதை நம்மால் முழுவதுமாக தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது என்பதுதான் நிதர்சனம்.

எனில் என்னதான் செய்வது என்றால், இதை நாம் சரியாக கையாள கற்றுக்கொள்வதே சிறந்த வழி. ஆக்கப்பூர்வமாக இந்த தொழில்நுட்பத்தை எப்படி கையாள்வது என்பது பற்றியும், இத்தொழில்நுட்பம் குறித்தும் நமக்கு பல்வேறு தகவல்களை தெரிவிக்கிறார் செயற்கை நுண்ணறிவு நிபுணர் நரேந்திரன்.

செயற்கை நுண்ணறிவு நிபுணர் நரேந்திரன்

“நவீன யுகத்தை பொறுத்தவரை நாம் பார்ப்பது, கேட்பது என்று எதையும் நம்ப இயலாது. இவையெல்லாம் போலிகளை உண்மையை போல தோன்றவைத்து விடுகிறது. இறுதியில், நாம் எதிர்க்கொள்ளும் ஒவ்வொரு விஷயங்களின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இத்தொழில்நுட்பங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இம்மாதிரியான தொழில்நுட்பங்கள் எல்லாமே முதலில் ஆய்வகங்களில் பயன்படுத்தப்பட்டு பிறகு சோதனை செய்யப்பட்டு இறுதியில் அனைவராலும் உபயோகப்படுத்தப்படும் அளவிற்கு எளிதான ஒன்றாக மாறிவிடும். கையாள்வதற்கு எவ்வளவு எளிதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் அதிகரிக்கிறது. செயற்கை நுண்ணறிவை பெறுத்தவரை அதில் நிறைய நன்மைக்களும் இருக்கின்றன.

ஏ.ஐ செய்திவாசிப்பாளரை உருவாக்கியது போல சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளைக்கூட இதற்கு உதாரணமாக கூறலாம். மருத்துவம், பத்திரிகை, ஏன் சினிமா துறையிலும் ஒரே நேரத்தில் 5 படங்களிலும் கூட இதனை பயன்படுத்தி ஒருவரை நடிக்க வைக்க முடியும். (காவாலா பாடலுக்கு தமன்னாவின் முகத்துக்கு பதிலாக ஆண்ட்ரியா, சிம்ரன் போன்றோரின் நடனங்கள் இப்படி மாற்றப்பட்டு வைரலானது நமக்கு நினைவிருக்கலாம்)

இப்படி பல துறைகளும் இதன் தேவை என்பது அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதற்காகத்தான் தற்போது பலதரப்பினரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கல்லூரிகளில் பாடமாக எடுத்தும் படிக்கின்றனர். இப்படி இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் என்பது ஏராளமாக இருக்கிறது.

AI News Reader

எந்தவித தொழில்நுட்பமாக இருந்தாலும் அதனை சரியாக பயன்படுத்துவது என்பது நம் ஒவ்வொருவரின் கரங்களில் தான் உள்ளது. அப்படி இதையும் பயன்படுத்துவோம்!” என்றார்.

ராஷ்மிகாவின் போலி வீடியோ சம்பவத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவிக்கையில், “ஏப்ரல் 2023 இல் அறிவிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் ஏதாவது ஒரு பயனரால் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என்று புகார் அளிக்கப்பட்டால் சரியாக 36 மணி நேரத்திற்கு அந்த பதிவும் அத்தளத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியிட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

ஆகவே உங்களுக்கு இப்படியான ஏதேனும் சம்பவம் நடந்தால் உடனடியாக சைபர் கிரைமில் புகாரளிக்கவும்.