இந்தியாவின் முன்னணி நிறுவனமான அதானி குழுமம், தனது வணிகத்தை உலகம் முழுதும் விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில், அர்ஜென்டினாவின் முதல் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதிக்கான 10 ஆண்டு கால கடல்சார் சேவைகள் ஒப்பந்தத்தை அதானி நிறுவம் பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனம் தென் அமெரிக்காவில் நுழைவதோடு, உலகளாவிய கடல்சார் சேவைகளில் தனது தடத்தையும் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவின் அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அதானி குழுமம் செயல்பட்டு வருகிறது. முன்னணி பன்னாட்டு கூட்டு நிறுவனமாகச் செயல்படும் இந்தக் குழுமம், இந்தியா தவிர, உலகெங்கிலும் தனது கிளைகளை விரித்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், துறைமுகங்கள் - தளவாடங்கள், ஆற்றல் - மின்சாரம், விமான நிலையங்கள், சிமெண்ட் உள்ளிட்டவற்றில் தனது வணிகத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், அர்ஜென்டினாவில் இருந்து இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கான புதிய ஒப்பந்தத்தை அதானி போர்ட் நிறுவனம் தன்வசப்படுத்தியுள்ளது. ஆம், அது அர்ஜென்டினாவின் முதல் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதிக்கான 10 ஆண்டு கால கடல்சார் சேவைகள் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த நிறுவ்னாம், தென் அமெரிக்காவில் நுழைவதுடன், சர்வதேச கடல்சார் சேவைகளில் தனது தடத்தையும் விரிவுபடுத்தியுள்ளது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெரிடியன் குழுமத்துடனான ஒரு கூட்டமைப்பின் மூலம், அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட் (APSEZ)இன் கீழ்நிலை துணை நிறுவனமான தி அதானி ஹார்பர் இன்டர்நேஷனல் FZCO-விற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கான இழுவைப் படகு செயல்பாடுகள், கடல்சார் தளவாடங்கள், வழங்கல் ஆதரவு மற்றும் பணியாளர் இடமாற்ற சேவைகள் உள்ளிட்ட முழுமையான கடல்சார் சேவைகளை அதானி குழுமம் வழங்கும்.
இந்த திட்டத்திற்கான முதல்கட்டம், செப்டம்பர் 2027-இல் தொடங்கி, ஆண்டுக்கு 2.45 மெட்ரிக் டன் திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஆண்டுக்குச் சுமார் 28 சரக்குகளுக்குச் சமமாகும். இதன்மூலம் இது அர்ஜென்டினாவின் முதல் செயல்பாட்டில் உள்ள LNG ஏற்றுமதித் திட்டமாக அமைகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட் முழுநேர இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO) அஷ்வனி குப்தா, “பல்வேறு புவியியல் பகுதிகளில் பெரிய அளவிலான எரிசக்தி உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் எங்களின் வளர்ந்து வரும் திறனை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.