இந்தியாவின் அதானி குழுமம் உலகம் முழுவதும் தொழில் முதலீடுகளில் கவனம் செலுத்திவருகிறது. அந்த வகையில், இலங்கையிலும் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் புதிய முனையம் அமைத்துவரும் அதானி நிறுவனத்துக்கு அமெரிக்க நிறுவனம் நிதி உதவி அளிக்க ஒப்புக்கொண்டிருந்த நிலையில், அந்த நிதியுதவி தேவையில்லை என அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார வலய லிமிடெட் (APSEZ)தெரிவித்துள்ளது.
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில், முனையம் ஒன்றை அமைக்கும் பணியில், அதானி துறைமுக நிறுவனம், இலங்கையின் ஜான் ஹீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம், இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) ஆகியன இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த முயற்சியில் அதானி போர்ட்ஸ் 51% பங்குகளை வைத்துள்ளது.
இந்த நிலையில் இத்திட்டத்துக்கு அமெரிக்காவின் சா்வதேச வளா்ச்சி நிதி நிறுவனத்திடம் (DFC) அதானி துறைமுகங்கள் நிறுவனம் கடன் கோரியது. இந்தக் கோரிக்கையை ஏற்ற டிஎஃப்சி, 553 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4,693 கோடி) கடனாக அளிக்க கடந்த ஆண்டு நவம்பரில் ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில், முனையம் அமைப்பது தொடா்பாக அதானி துறைமுகங்கள் நிறுவனத்துக்கும், இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தமது நிபந்தனைகளுக்கு ஏற்ப திருத்தியமைக்குமாறு டிஎஃப்சி கேட்டுக்கொண்டது. இதன் காரணமாக அதானி துறைமுகங்கள் நிறுவனத்துக்கு டிஎஃப்சி கடன் அளிப்பது நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க நிறுவனத்துடனான கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் வெளியேறியுள்ளது. இதுகுறித்து அதானி குழுமம், “இலங்கையில் CWIT திட்டம் சிறப்பாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் என்றும் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். இந்தத் திட்டமானது நிறுவனத்தின் உள்திரட்டல்கள் மற்றும் மூலதன மேலாண்மைத் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது. அதாவது, திட்டத்திற்கு நிதியளிக்க அதன் சொந்த வளங்களைப் பயன்படுத்துவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) அதானி துறைமுகங்கள் நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், ‘கொழும்பு துறைமுக முனைய திட்டத்துக்கு டிஎஃப்சியிடம் கடன் கேட்டு விடுக்கப்பட்ட கோரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதானி துறைமுகங்கள் நிறுவனத்தின் சொந்த செலவில், அந்தத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) பிரபல தொழிலதிபருமான கவுதம் அதானி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதித்துறை தெரிவித்தது. தவிர, அதானி உள்ளிட்ட 6 பேர் மீது நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான், அமெரிக்க நிறுவனத்தின் நிதி உதவியை ஏற்க அதானி போர்ட் நிறுவனம் மறுத்துள்ளது.