ட்ரம்ப், அதானி எக்ஸ் தளம்
இந்தியா

ட்ரம்ப் வருகையால் புத்துணர்ச்சி.. அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் அதானி குழுமம்!

டொனால்டு ட்ரம்ப் அதிபராகியிருக்கும் நிலையில் அமெரிக்காவில் வணிக முதலீடுகளை மேற்கொள்ள அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.

Prakash J

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி (டாலர் 265 மில்லியன்) லஞ்சம் கொடுக்க கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் அதானி குழுமத்தின் நிறுவனர் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்டோர் மீது முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

அதானி, அமெரிக்கா

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக அதிபராகியுள்ளார் ட்ரம்ப். அவரது மறுவருகையைத் தொடர்ந்து, அதானி குழுமம் தனது அமெரிக்க முதலீட்டுத் திட்டங்களுக்கு புத்துயிரூட்டியிருப்பதாக கெளதம் அதானிக்கு நெருக்கமானவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

மின்சாரம் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டு சேவைகள், அணு சக்தி, துறைமுகம் உள்ளிட்ட துறைகளில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம் 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், 265 மில்லியன் டாலர் லஞ்சம் தொடர்பாக அதானி மற்றும் ஏழு பேர் மீது அமெரிக்காவில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் திட்டங்கள் முடங்கியுள்ளன.

ட்ரம்ப் வருகையால் மீண்டும் இந்த பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த முதலீடு குறித்த திட்டங்கள் ஆலோசிப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுகிறது. ஆனால் இதுகுறித்து கௌதம் அதானி குழுமத்திடமிருந்து இன்னும் உறுதியான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.