தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் காஞ்சா கச்சிபௌலியில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில், ஒரு ஐடி பூங்காவை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், ’மாநிலத்தில் முதலீட்டை ஊக்குவிப்பதே தனது குறிக்கோள் என்றும், அந்த நிலத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்றும் அரசாங்கம் பதிலளித்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக புல்டோசர்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் அப்பகுதிக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து காவலர்கள் குவிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “இதை நான் இப்போதுதான் பார்த்தேன். மனம் உடைந்துவிட்டது. இது சரியில்லை" எனப் பதிவிட்டுள்ளள்ளார். தொடர்ந்து, உடைந்த இதய ஈமோஜியையும் சேர்த்துள்ளார்.
இதற்கிடையே, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர் குழுக்கள் இந்த திட்டம் இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அரசாங்கம் நிலத்தின் உரிமையைக் கோருகிறது. அதேநேரத்தில், ஹைதராபாத் பல்கலைக்கழக பதிவாளர் நில எல்லை இறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். இந்தச் சூழலில், அரசாங்கத்தின் காடு அழிப்பு நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், அப்பகுதியில் மரம் வெட்டுவதைத் தடுக்குமாறு தெலுங்கானா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.