நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால், கொந்தளித்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் அந்த நிகழ்ச்சியைப் பதிவுசெய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். சிவசேனா கட்சியினர் நாற்காலிகள், மேசைகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, குணால் கம்ரா மீது ஒரு வழக்கும் அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவைச் சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீதும் என இரண்டு வழக்குகளை மும்பை காவல்துறை பதிவு செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் இந்த விவகாரம் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஆதரவாகப் பேசியுள்ள முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, ஏக்நாத் ஷிண்டேவை அவமதிக்க முயன்ற விதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். நகைச்சுவை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் ஒரு உயர்மட்ட தலைவரை வேண்டுமென்றே அவமதித்து அவதூறு செய்ய முயற்சித்தால், அதை பொறுத்துக்கொள்ள முடியாது. குணால் கம்ரா மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மற்றொரு துணை முதல்வர் அஜித் பவார், “ஒவ்வொருவரும் தனது செயல்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். யாரும் சட்டம், அரசியலமைப்பு மற்றும் விதிகளை மீறிச் செல்லக்கூடாது. சட்டத்துக்கு உட்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.