கர்ப்பூரி தாக்கூர் Pramod Pushkarna
இந்தியா

பிஹாரின் ”ஜன நாயகன்”., சோஷலிஸ இயக்கத்தின் முன்னோடி... கர்ப்பூரி தாக்கூர் வாழ்க்கை வரலாறு !

பிஹார் மக்களால் “ஜன நாயக்” என்று போற்றப்படும், பிஹாரின் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூரின் வரலாற்றையும், பிஹாரின் சோஷலிச சிந்தனை பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்..

PT WEB

பிஹாரின் சமூக மாற்றத்தை முன்னெடுத்த கர்ப்பூரி தாக்கூர், சோஷலிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராக, கல்வி மற்றும் இடஒதுக்கீடு போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அவரது ஆட்சியில், பள்ளிகளில் கட்டணமில்லா கல்வி நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாட்டு அரசியலுக்கு திராவிட இயக்கம் எப்படியோ, அப்படி பிஹார் அரசியலுக்கு சோஷலிஸ இயக்கம். சோஷலிஸம் குறித்து காந்தியின் வழித்தோன்றல்கள் இடையே இரண்டு பார்வைகள் இருந்தன. முதலாவது பார்வை: நேரு, படேல் வழிவந்தவர்களுடைய நகர்மய பார்வை. இரண்டாவது பார்வை: ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோஹியா வழிவந்த கிராமமய பார்வை.

ராம் மனோகர் லோஹியா (left), ஜெயப்பிரகாஷ் நாராயணன் (right)

அரசியல் சுதந்திரத்தைத்தான் காங்கிரஸ் முதன்மையாக பார்த்தது. இந்நிலையில் தான், சமூக விடுதலையும் முக்கியம் என்ற பார்வையில் உருவாக்கப்பட்டதே சோஷலிஸ இயக்கம். காந்தியமும் மார்க்ஸியமும் இணைத்து உருவான சிந்தனையின் வெளிப்பாடு சோஷலிஸம். காங்கிரஸின் ஓர் அங்கமாக இருந்த சோஷலிஸம், 1948இல் புதிய கட்சியாகவே உருவாக்கப்பட்டது. 1951மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு அடுத்து அதிகமான வாக்குகளைப் பெற்றது. சோஷலிஸ்ட் கட்சி தலைவர்கள் இடையேயான கருத்து முரண்பாடுகளால், சோஷலிஸ்ட் கட்சி சிதைந்து காணாமல் போனது. இன்று, நாம் பார்க்கிற ஜனதா பரிவாரங்களுக்கு தாய் இந்த சோஷலிஸ்ட் கட்சிதான். சிந்தனை அளவில் பெரிய தாக்கத்தை சோஷலிஸ்ட் தலைவர்களான ஜெ.பியும், லோஹியாவும் உருவாக்கியிருந்தனர். சுதந்திரம், சமத்துவம், சமூக நீதியை உரத்துப் பேசுபவர்கள் என்று சோஷலிஸ்ட்டுகளைச் சொல்லலாம்.

பிஹார்தான் சோஷலிஸ்ட் கட்சியின் உருவாக்க மையமாக இருந்தது. அதில், பிஹார் மக்களால் “ஜன நாயக்” என்று போற்றப்படும் கர்ப்பூரி தாக்கூர் முக்கியமான தளகர்த்தர். பிதாஞ்சியா எனும் குக்கிராமத்தில், 1924ல், நய் என்றழைக்கப்படும் நாவிதர் சமூகத்தில் பிறந்தவர் கர்ப்பூரி தாக்கூர். இளம் வயதிலேயே காந்தியால் ஈர்க்கப்பட்டு, மாணவர் அரசியலுக்குள் நுழைந்தவர் கர்ப்பூரி. சுதந்திர போராட்ட காலத்தில் இரண்டே கால் வருஷங்கள் சிறை வாழ்க்கையை அனுபவித்தார். சுதந்திரம் பெற்ற பிறகு ஆசிரியரானாலும் கூட, கர்ப்பூரி தாக்கூரை அரசியல் விடவில்லை. சோஷலிஸ்ட் பாதையில் படிப்படியாக முன்னகர்ந்தவர் 1970இல் பிஹாரின் முதல்வர் ஆனார்.

கர்ப்பூரி தாக்கூர்

கர்ப்பூரி தாக்கூர் 6 மாத காலம்தான் ஆட்சியில் இருந்தார். மீண்டும், 1978இல் முதல்வரானவர், 2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். இந்த குறுகிய ஆட்சிக் காலத்திலேயே பிஹாரில் பெரும் சமூக மாற்றத்துக்கு வித்திட்டார் கர்ப்பூரி. இவரது ஆட்சியில்தான், பள்ளிகளில் 12ஆவது வரை கட்டணமில்லா கல்வி எனும் நடைமுறை அமலுக்கு வந்தது. கர்ப்பூரி தாக்கூரின் ஆட்சியில்தான், பிஹாரில் இடஒதுக்கீடு புரட்சி ஆரம்பித்தது. பிராமண ஆதிக்கத்தை மட்டுமல்ல, பி.சி- யிலும் பெரும்பான்மை சாதிகளின் ஆதிக்கத்துக்கு எதிராகச் சிந்தித்தார் கர்ப்பூரி. பிற்படுத்தப்பட்டோர் பிரிவை இரண்டாகப் பிரித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தந்தார். கட்சியிலும் ஆட்சியிலும் எப்போதும் பகுஜன்களுக்கு முன்னுரிமை அளித்தார். மதப் பெரும்பான்மை அரசியலுக்கும் சாதிய ஆதிக்க அரசியலுக்கும் எதிராக நின்ற கர்ப்பூரி கடைசி வரை எளிய வாழ்க்கையையே வாழ்ந்தார்; செல்வம் சேர்க்கவில்லை.

உயர் பதவிகளில் இருந்தபோதே, போலீஸ் பாதுகாப்பை ஏற்க மறுத்தவர் கர்ப்பூரி. சீர்திருத்தங்களுக்காக பதவியை இழக்க எப்போதும் தயாராக இருந்தார்; இழந்தார். லாலு, நிதிஷ், ராம் விலாஸ் பாஸ்வான் மூவரின் அரசியலிலும் கர்ப்பூரி தாக்கூரின் தாக்கம் உண்டு இன்றும் பிஹாரில் கர்ப்பூரி தாக்கூர் பெயருக்கு என்று தனி மதிப்பு இருக்கிறது கர்ப்பூரி வாழ்ந்த காலத்தில் அவருக்கு எதிர் வரிசையில் இருந்த பாஜக இப்போது பாரத ரத்னா வழங்கியிருக்கிறது!