அபிஜித் திப்கே X
இந்தியா

”வரலாற்றிலேயே மிகப்பெரிய கோழை” - பிரதமர் மோடி குறித்து அபிஜீத் திப்கே விமர்சனம்!!

24 மணி நேரத் தடுப்புக் காவலுக்குப் பிறகு வெளியே வந்திருக்கும் கரப்பான் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

Premkumar S

நீட் முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் நடத்தப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் வெற்றி பெற்றது. தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இந்தச் சம்பவம் முடிவடைந்த சில மாதங்களிலேயே, SIR விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக பல்வேறு முடிவுகளை எடுத்ததாக மற்ற இரு தேர்தல் ஆணையர்கள் குற்றம் சாட்டியது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சிஜெபி போராட்டம்

அதன் ஒருபகுதியாக கரப்பான் ஜனதா கட்சி நேற்றைய தினம் டெல்லியில் போராட்டத்தை அறிவித்திருந்தது. அதற்காக, கரப்பான் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே, சவுரஸ் தாஸ், அஷுதோஷ் உள்ளிட்டோர் டெல்லி விமானம் மூலம் டெல்லி சென்றனர். ஆனால், இந்தப் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதியளிக்காத நிலையில், அபிஜீத் திப்கே குழுவினர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்திருந்தனர். எனினும், போராட்டக்காரர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், அபிஜீத் திப்கே மற்றும் அவரது குழு தொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நிர்வாக நீதிபதி நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதையடுத்து, "1 ஆண்டுக்கு அமைதியைக் குலைக்கக் கூடாது" என்ற நிபந்தனையுடன் அபிஜீத் திப்கே மற்றும் அவரது குழுவினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச்சூழலில் தான், அபிஜீத் தீப்கே, தனது எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருப்பது நாட்டிற்குப் மிகப்பெரிய அவமானம். இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய கோழையையும், மற்றவர்களை மிரட்டிப் பணியவைக்கும் ஒருவரையும் நாடு கண்டதில்லை” என்று அவர் சாடியுள்ளார்.