தலைநகர் டெல்லிக்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 48 இடங்களில் அபார வெற்றிபெற்று அரியணை ஏற இருக்கிறது. ஆம் ஆத்மி 22 இடங்களில் வென்ற நிலையில், ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸுடன் கூட்டணி இல்லாதது, புதிய மதுபானக் கொள்கை ஊழல், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆடம்பர பங்களா, வடகிழக்கு டெல்லி கலவரம், அடிப்படை வசதிகள் செய்யாதது, யமுனை நீர் பற்றிய பேச்சு உள்ளிட்டவை காரணங்களாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முக்கியமாக, ”அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபானக் கொள்கை வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனாலும், அவர் உடனே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இது மிகவும் தவறு” என பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் விமர்சித்திருந்தார். அதாவது, அவர் முதல்வராக இல்லாதது பாஜகவுக்கு பலத்தை அளித்ததாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில்தான், அவர் பஞ்சாப் மாநில இடைத்தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் நடைபெற்ற பஞ்சாப் எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தற்போது ஆம் ஆத்மியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பஞ்சாபில் 2027ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மற்றும் லூதியானா மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அந்த தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் எனவும், அதில் வெற்றி பெற்றால் முதல்வராக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து லூதியானா மத்திய எம்எல்ஏ அசோக் பிரஷார் "கூட்டத்தில், பஞ்சாபில் கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் கெஜ்ரிவால் எங்களிடம் கூறினார். பஞ்சாபில் எந்த மாற்றமும் இருக்காது" என்று அவர் கூறினார்.
முன்னதாக, “பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. உட்கட்சி பூசல் காரணமாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். 30க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தங்கள் தரப்பினருடன் சுமார் ஒரு வருடமாகத் தொடர்பில் இருக்கின்றனர். அவர்கள் கட்சி மாறவும்கூட ரெடியாக இருக்கின்றனர். பஞ்சாபில் இப்போது ஆம் ஆத்மி கட்சியில் குழப்பம் இருக்கிறது. இங்கு முதல்வராக உள்ள பகவந்த் மானை மாற்ற டெல்லி ஆம் ஆத்மி தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. மாநிலத்தில் உள்ள பல ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என்றே சொல்லி வருகிறார்கள்” என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி மறுத்திருந்தது.
அதேநேரத்தில், இதுதொடர்பாக பஞ்சாப் அரசியல் விமர்சகர் குல்தீப் சிங், ”பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சியை பிளவுபடுத்த இங்குள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் விரும்புகின்றன. மேலும், ஒருவேளை கெஜ்ரிவால் லூதியானாவில் போட்டியிட முடிவு செய்தால், அது ஆம் ஆத்மி அழிவுக்கே காரணமாக இருக்கும். தேசிய அளவில் ஆம் ஆத்மி கட்சியை வளர்த்தெடுக்க கெஜ்ரிவால் முயலும் நிலையில், அவர் பஞ்சாபில் போட்டியிட்டால் அது மிகப் பெரிய சர்ச்சையாக வெடிக்கும்" எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் ஆம் ஆத்மி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.