2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ’I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்தன. முன்னதாக, இந்தக் கூட்டணியை ஆளும் பாஜகவுக்கு எதிராக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உருவாக்கியிருந்தார். பின்னர், கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் அப்போதே அதிலிருந்து விலகிய நிதிஷ், பாஜகவுக்குத் தாவினார். இதனைத் தொடர்ந்து ’I-N-D-I-A’ கூட்டணியை காங்கிரஸ் வழிநடத்தி வருகிறது. ஆனாலும் ’I-N-D-I-A’ கூட்டணி என்ற அமைப்பு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகச் செயல்படாமல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு; ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நிலைப்பாடு என்கிற நிலையில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது.
முக்கியமாக, ’I-N-D-I-A’ கூட்டணியை முழுமையாக ஒழுங்குபடுத்துவதில் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது. மேலும், தலைமை குறித்து உரிய முடிவு எடுக்கப்படாதது, கூட்டணியில் விரிசல் எனப் பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே மக்களவைத் தேர்தல் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி, பெருத்த தோல்வியை அடைந்தது.
இந்த விவகாரம் கூட்டணியில் மேலும் எதிரொலித்தது. காரணம், அதில் தொடர்ந்துவரும் சலசலப்புகள்தான். இன்னும் சொல்லப்போனால் I-N-D-I-A கூட்டணியில் காங்கிரஸுடன் சில கட்சிகள் அங்கம் வகித்திருந்தாலும் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் மாநிலக் கட்சிகள் காங்கிரஸை விரும்பவில்லை. கூட்டணியில்லாமல் தனித்தே போட்டியிட்டன.
இந்த நிலையில், I-N-D-I-A கூட்டணி ஆட்டம் கண்டுள்ளது. டெல்லியில் மாசு, குடிமை வசதிகள், சட்டம் ஒழுங்கு மீதான தவறான நிர்வாகம் முதலானவற்றை குறிப்பிட்டு, நேற்று (டிச. 25) ஆம் ஆத்மி, பாஜகவை எதிர்த்து, டெல்லி காங்கிரஸ் 12 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டது.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன், ”ஊழல் எதிர்ப்பை முன்வைத்துதான், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. இப்போது அவர்கள் அதை மறந்துவிட்டார்கள். டெல்லியை லண்டனைப்போல் ஆக்குவோம் என்றும் கூறினர். தற்போது தேசிய தலைநகரை மாசுபடுத்துவதில் முதலிடமாக உருவாக்கியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஒரு தவறு. அதை சரிசெய்ய வேண்டும், மேலும் அது எனது தனிப்பட்ட கருத்து’’ எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஆம் ஆத்மி, ”அரவிந்த் கெஜ்ரிவாலை தேசவிரோதி என்று அழைத்ததுடன், அவருக்கு எதிரான வெள்ளை அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், I-N-D-I-A கூட்டணியிலிருந்து காங்கிரஸை நீக்க, கூட்டணி கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்படும்” என்று ஆம் ஆத்மி எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங், ”அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்குச் சாதகமாக அமைவதற்காக காங்கிரஸ் பலவிதமான செயல்களை மேற்கொண்டு வருகிறது. பாஜக எழுதிக் கொடுப்பதைத்தான், அஜய் மாக்கன் அறிக்கைகளாக வெளியிடுகிறார். பாஜகவின் அறிவுறுத்தலின் அடிப்படையில்தான், ஆம் ஆத்மியையும் காங்கிரஸ் குறிவைக்கின்றனர். மேலும், அவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை தேசவிரோதி என்று குறிப்பிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தலின்போது, டெல்லியிலும், சண்டிகரிலும் காங்கிரஸுக்காக கேஜ்ரிவால் பிரசாரம் செய்தார். நாடாளுமன்றப் பிரச்னைகளிலும் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி துணை நிற்கிறது. ஆனால், அக்கட்சி கெஜ்ரிவாலை தேசவிரோதி என்று அழைப்பதுடன், அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்கின்றனர். அதிகபட்ச வரம்புகளையும் மீறிய அஜய் மாக்கன் மீது காங்கிரஸ் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், I-N-D-I-A கூட்டணியில் இருந்து காங்கிரஸை நீக்குமாறு, கூட்டணிக் கட்சிகளிடம் கோருவோம்’’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டெல்லி முதல்வர் அதிஷி, ”காங்கிரஸின் நடவடிக்கைகளும் வார்த்தைகளும், டெல்லி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதுவரையில் பாஜக மீது காங்கிரஸ் காவல்துறையில் புகார் அளித்ததில்லை. ஆனால், ஆம்ஆத்மிக்கு எதிராக அவ்வாறு செய்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.
டெல்லியில் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் கூட்டணியில் போட்டியிட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த மிகப்பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது. எனினும், அந்த தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது. தற்போது அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கிறது. இதன் காரணமாகவே இவ்விரு கட்சிகளுக்குள் மோதல் தொடங்கியுள்ளது. முன்னதாக, சமீபத்தில் நடைபெற்ற ஒரு சில மாநிலத் தேர்தல்களில்கூட இந்த இரு கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீடு காரணமாக இரண்டும் தனித்தே போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.