massive flood in an area of ​​Kerala  Viral Video
இந்தியா

நேபாள துயரத்தை போல கேரளாவிலும் : மழையே பெய்யாமல் வந்த வெள்ளம்... வெளிவந்த அதிர்ச்சி பின்னணி !

கேரளாவில் மழையே பெய்யாத பகுதியில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் பலரின் உயிரை பலிவாங்கியுள்ளது.

Praveen Joshva L

கேரளா மலப்புரம் கோட்டப்புழா ஆற்றில், மழை இல்லாத நிலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பலர் சிக்கினர். வனத்துறை, மீட்புப்படை இணைந்து கயிறு மூலம் பலரை மீட்டாலும், ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். நீலகிரி அப்பர் பவானி பகுதியில் பெய்த பெருமழை காரணமாக வந்த வெள்ளம் இதற்கு காரணம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கோட்டப்புழா ஆறு ஓடி வருகிறது. உள்ளூர் மக்கள் இந்த ஆற்றை பூக்கோட்டும்பாடம் ஆறு என்றும் அழைத்து வருகின்றனர். இந்த ஆற்றில் குறுக்கே டி.கே. காலனி என்ற பகுதியில் தடுப்பணை ஒன்றும் அமைந்துள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் பகுதியான இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை தருவர். இந்த ஆற்றில் கடந்த ஞாயிறு அன்று உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென ஆற்றின் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றுநீரின் அளவு அதிகரிப்பதை உணர்ந்த வனத்துறையினர் உடனடியாக மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்த பலர் அங்கிருந்து உடனடியாக வெளியேறியுள்ளனர். எனினும் சுமார் 27 பேர் ஆற்று வெள்ளத்தில் சிக்கி அங்கிருந்த பாறையில் ஏறியுள்ளனர். அவர்களை வனத்துறையினரும் மீட்பு படையினரும் கயிறுகள் மூலம் மீட்டனர்.

எனினும் இந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஒரு பெண் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த பகுதியில் மழையே பெய்யாத நிலையில், திடீரென இவ்வளவு பெரிய வெள்ளம் வந்து உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் நேபாளத்திலும் இப்படி மழையே பெய்யாத நிலையில், பனிப்பாறை உடைப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு, ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதே போன்ற மற்றொரு இயற்கை நிகழ்வால் இந்த கேரளா வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோட்டப்புழா ஆறு தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி நீர்த்தேக்கப் பகுதியில் உருவாகி கேரளாவிற்குள் பாய்கிறது. அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட இந்த நீலகிரி பகுதியில் பெய்த பெருமழை காரணமாக அங்கிருந்து உருவான வெள்ளம் கோட்டப்புழா ஆறு வழியாக பாய்ந்து மழையே பெய்யாத டி.கே. காலனி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோட்டப்புழா ஆற்றில் இதற்கு முன்னர் பலமுறை இப்படி மழையே பெய்யாத நிலையிலும் பெருவெள்ளம் ஏற்பட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். இதனால் தெரியாத இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதையே இந்த நிகழ்வு உணர்த்தியுள்ளது.