model image, israel flag
model image, israel flag twitter
இந்தியா

’சாவதுதான் விதியென்றால் அது எங்கு நடந்தால் என்ன’-வேலைக்காக இஸ்ரேல் செல்லும் ஹரியானா இளைஞர்கள் வேதனை!

Prakash J

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு: ஹரியானாவில் வரிசைகட்டி நின்ற இளைஞர்கள்!

வடமாநிலங்களில் வேலை இல்லாக் கொடுமை தலைவிரித்து ஆடுவதாக அன்றாடம் செய்திகளில் காண முடிகிறது. அதன்காரணமாக, தமிழகத்தில் வடஇந்தியர்களின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஹரியானாவில் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதுவும் போர் நடைபெற்று வரும் இஸ்ரேல் நாட்டில் கட்டட வேலைக்குச் செல்வதற்கான நேர்முகத் தேர்வு என்பதுதான் மிகவும் வியப்பான விஷயம்.

israel war

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி இருப்பதாகவும் எண்ணற்ற கட்டடங்கள் தரைமட்டமாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தரைமட்டமான பகுதிகளில் மீண்டும் கட்டடங்களை எழுப்பும் பணியில் இஸ்ரேல் முயன்று வரும் நிலையில், போதிய ஆட்கள் இல்லாமல் தவித்து வருகிறது. ஏற்கெனவே தங்கள் நாட்டில் வேலைபார்த்துவந்த பாலஸ்தீனர்களின் பணி அனுமதியை அந்த நாடு ரத்து செய்ததாலும், போர் பதற்றத்தினாலும் அந்நாட்டு வேலைக்காகப் பயணிப்போரின் வருகையும் குறைந்துள்ளது. மதிப்பீடுகளின்படி, இஸ்ரேலுக்கு சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் தேவை எனச் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: ஈரான் - பாகிஸ்தான் இடையே திடீர் மோதல்: பின்னணி காரணம் என்ன? உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன? ஓர் அலசல்

இஸ்ரேலும் ஹரியானாவும் ஒப்பந்தம்

இந்தச் சூழலில்தான் கடந்த ஆண்டு இஸ்ரேலும் இந்தியாவின் ஹரியானா அரசும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன. அதாவது, இஸ்ரேலில் நர்சிங் மற்றும் கட்டுமானத் துறைகளில் 10,000 இந்தியர்கள் பணியாற்ற அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இதைக் கவனத்தில் கொண்ட இஸ்ரேல், தற்போது அந்த யுக்தியை இந்தியா பக்கம் திருப்பியுள்ளது. அந்த வகையில்தான், இருநாடுகள் ஏற்கெனவே போட்டிருந்த ஒப்பந்தத்தின்படி, அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஹரியானா கௌஷல் ரோஸ்கர் நிகாம் என்ற நிறுவனம் இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பொது அறிவிப்பை வெளியிட்டது.

9 மணி நேரம் வேலை; 1.38 லட்சம் சம்பளம்

விளம்பரத்தின்போது, ’இஸ்ரேலில் வேலை பெறும் நபர் ஒருநாளைக்கு 9 மணி நேரமும், மாதத்தில் 26 நாட்களும் வேலை செய்ய வேண்டும். வேலையிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டும் என்றால், அது இஸ்ரேலிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் இஸ்ரேலிய நிறுவனத்தால் வழங்கப்படும். பணிபுரியும் நபர் ஒவ்வொரு மாதமும் 6,100 இஸ்ரேலிய புதிய ஷெக்கல் தொகையைச் சம்பளமாகப் பெறுவார். இது இந்திய ரூபாயில் தோராயமாக 1 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய். இது தவிர, மருத்துவக் காப்பீடு மற்றும் தங்குமிடத்திற்கான ஏற்பாடுகளும் இருக்கும். ஆனால் இவற்றுக்கு அந்த நபர் தனது சொந்தப் பணம் செலுத்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: இந்தூர்: கோச்சிங் கிளாஸில் மாரடைப்பால் மேஜையில் விழுந்த மாணவர்! சிலநாட்களில் 4 மரணங்கள்-வைரல் வீடியோ

’எங்கு செத்தால் என்ன’ விரக்தியில் பேசிய இளைஞர்

இதைத் தொடர்ந்து, இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இதன் ஒருபகுதியாக, கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தின் ரோஹ்தக்கில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட லெகாரம் என்ற இளைஞர், ”ஹரியானாவில் வேலைவாய்ப்புக்கு வழியில்லை. அதனால்தான், இங்கிருந்து வெளியேற விரும்புகிறோம். ஒருவேளை, சாவதுதான் நம்முடைய விதியென்றால், அது இஸ்ரேலில் நடந்தால் என்ன, இந்தியாவில் நடந்தால் என்ன? ஆனால், அதற்குள் அங்கு சென்று நல்லபடியாக வேலைசெய்து, சில காலம் இருந்துவிட்டு மீண்டும் இங்கு வருவோம் என்பது எனது நம்பிக்கை" என வேலைவாய்ப்பு கிடைக்காத விரக்தியில் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ”இந்த ஒப்பந்தத்தின் பின்னணி என்பது, தொழிலாளர்கள் இடம்பெயர்வதை ஒழுங்குபடுத்துவதற்கும், அங்கு செல்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதும் ஆகும். மேலும், இஸ்ரேலிலுள்ள தொழிலாளர் சட்டங்கள் மிகவும் கண்டிப்பானவை. அதனால், வெளிநாட்டிலுள்ள நம் மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்கான எங்களுடைய பொறுப்பை நாங்கள் மிகவும் உணர்ந்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஹரியானா சட்டசபை

ஹரியானா மாநிலத்தில் வேலையின்மை 2014இல் இருந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஹரியானா மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அந்த மாநிலத்தில் பல மாவட்டங்களைச் சேர்ந்த 5,43,874 இளைஞர்கள் வேலை கேட்டு அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: கெடு விதித்த மத்திய வீட்டுவசதி துறை: அரசு இல்லத்தைக் காலிசெய்த மஹுவா மொய்த்ரா!