ஈரான் - பாகிஸ்தான் இடையே திடீர் மோதல்: பின்னணி காரணம் என்ன? உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன? ஓர் அலசல்

ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மாறிமாறி ஏவுகணைகளைத் தாக்கிக் கொண்டதன் காரணம் குறித்து இக்கட்டுரையில் அலசுவோம்.
பாகி., ஈரான் கொடிகள்
பாகி., ஈரான் கொடிகள்ட்விட்டர்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் (பிப்ரவரி 24, 2022 தொடக்கம்) 700 நாட்களை நெருங்கும் நிலையில், மறுபுறம் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தும் (2023, அக்டோபர் 7) போரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களில் ஈரானும் பாகிஸ்தானும் மாறிமாறி ஏவுகணைகளை வீசியிருப்பது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. இதனால் 3வது உலகப்போர் வந்துவிடுமோ என வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

பாகிஸ்தான் மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்!

கடந்த ஜனவரி 16ஆம் தேதி, பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் ஜெய்ஷ் உல் அடல் பயங்கரவாத அமைப்பைக் குறிவைத்து, ஈரான் ராணுவத்தின் புரட்சிப்படை ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த இஸ்ரேல் ஆதரவு தீவிரவாத முகாம்களை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியது. இதில் ஏராளமான வீடுகள் இடிந்தன. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது.

தங்கள் நாட்டுக்குள் தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. ’ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்ததுடன், தனது நாட்டிலிருந்த ஈரான் தூதரையும் வெளியேற்றியது.

இந்த நிலையில், ஈரானிற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, நேற்று (ஜனவரி 18) பாகிஸ்தான் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் குண்டுகளைவீசி தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரானுக்குப் பதிலடி கொடுத்த பாகிஸ்தான்: தாக்குதலுக்குக் காரணம் என்ன?

சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தானுக்கும், ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரானுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஜெய்ஷ் அல் அடல் என்கிற பயங்கரவாத இயக்கம், பாகிஸ்தானின் பலுசிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இவ்வியக்கம், ஈரானில் பல தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. ஈரானில் கடந்த பல ஆண்டுகளாகப் பாதுகாப்புப் படையினரை இலக்குவைத்து ஜெய்ஷ் அல் அடல் இயக்கம் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த டிசம்பரில் ஈரானின்சிஸ்தான் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் அல் தும் என்ற சன்னி தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ மூத்த தளபதி உட்பட 11 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பழிவாங்கும் விதமாகவே ஈரான், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல் அடல் இயக்க முகாம்களை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்தது.

எல்லை நாடுகளில் போர் தொடுத்த ஈரான்:

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் ஈரானில் காசிம் சுலைமாணி நினைவேந்தல் நிகழ்வில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவு அமைப்பான மொசாட் உளவு அமைப்பின் தலைமை அலுவலகம் மீது குறிவைத்து தாக்கியது. காரணம், இந்த உளவு அலுவலகம் குர்திஸ்தானின் அர்பில் பகுதியில், அமெரிக்க தூதரகக் கட்டடத்தின் அருகே உள்ளது. இஸ்ரேல் நாட்டின் மொசாட் உளவு அமைப்பு, ஈரானுக்கு எதிராக உளவுத் தகவல்களை சேகரிப்பதாக நீண்டநாள் குற்றச்சாட்டு ஒன்றும் இருக்கிறது. இப்படி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் கூறியே தாக்குதல் நடைபெறுவதாக வல்லுநர்கள் கருதும் நிலையில், இந்த தாக்குதல்கள் அடுத்த இருநாட்டுப் போருக்கு வழிவகுத்துவிடுமோ என்கிற பதற்றம் உலக நாடுகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. அதனால் இரு நாடுகளும் போர் பதற்ற நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும் என உலக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரான் மீது ஏவுகணை வீச அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டதா பாகிஸ்தான்?

பாகிஸ்தான் – ஈரான் தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், ”சர்வதேச அளவில் அதிகரித்துவரும் போர் பதற்றங்கள் குறித்து அமெரிக்கா கவலைகொண்டுள்ளது. அனைத்துத் தரப்பிலும் இருநாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவுகளின் முக்கியத்துவம் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றவரிடம், ”ஈரானில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பாகிஸ்தான் அமெரிக்காவிடம் ஆலோசனை நடத்தியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளதே” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ”இதுதொடர்பாக, என்னிடம் தனிப்பட்ட கருத்துகள் எதுவும் இல்லை. அரசாங்கம் கூறிய கருத்துகளை மட்டுமே நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்” என்றார்.

பாகிஸ்தான் - ஈரான் போர் குறித்து பிற நாடுகள் சொல்வது என்ன?

இந்த விவகாரங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ”ஈரான் அரசு விரும்பத்தகாத செயல்களைச் செய்கிறது” என எச்சரித்துள்ளார்.

ஐ.நாசபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ”ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வான்வெளி தாக்குதல்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்க இரு நாடுகளும் தங்களுக்குள் ராணுவ கட்டுப்பாட்டைத் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். சர்வதேச இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையேயான நல்உறவுகளின் கொள்கைகளுக்கு ஒத்துழைத்து ஈரான், பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான அனைத்துவிதமான பதற்றத்தையும் அமைதியான முறைகள்மூலம் தீர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்லால், “இது ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். இந்தியாவைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தங்களது தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்றார்.

சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்க், ”பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஈரானும், பாகிஸ்தானும் அமைதி வழியில் கட்டுப்பாடுடன் நடக்கும் என்று சீனா நம்புகிறது. நிலைமையைச் சீராக்க, சீனா ஆக்கப்பூர்வமாக பங்காற்ற தயாராக இருக்கிறது. இருதரப்பும் விரும்பினால் சமாதானம் செய்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளில் நிலவும் ஏவுகணை தாக்குதலுக்கு முக்கியமான காரணம்!

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வீசிய ஏவுகணை தாக்குதல்களுக்குப் பிறகு, அந்நாடு ஹமாஸ் அமைப்பின்மீது போர் புரிந்துவருகிறது. ’ஹமாஸை அழிக்கும்வரை ஓயமாட்டோம்’ எனவும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் போருக்குப் பிறகுதான் அண்டைநாடுகளான சிரியா, ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின்மீது ஈரான் ஏவுகணைகளைத் தாக்கியது. எனினும், இஸ்ரேல் - ஹமாஸ் போருடன் ஈரானுக்கு நேரடியாகத் தொடர்பில்லை என்றாலும், ஹமாஸுக்கு ஆதரவாக ஹவுதி படையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஹவுதி படையினர்தான் ஈரான் ஆதரவுடன் தாக்குதலில் ஈடுபடுவதாக இஸ்ரேலும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. அதாவது, காசாவில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவுபெற்ற ஹமாஸ் படையினருக்கும் இடையிலான மோதல் தொடங்கியதிலிருந்து, தங்கள் நாட்டையொட்டிய செங்கடல் பகுதி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹவுதி படையினர் ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்களை ஏவியும் தாக்குதல்களை நடத்திவருகின்றனா்.

செங்கடலில் ஹவுதி அமைப்பினர் 27 முறைக்கு மேல் தாக்குதல்!

ஹமாஸ் அமைப்பினருக்கு அதரவு அளிக்கும் வகையில், இஸ்ரேல் தொடா்பான சரக்குக் கப்பல்களை மட்டும் தாக்கி அழிப்பதாக ஹவுதி படையினர் அறிவித்தனர். ஆனால், அவர்களுடைய அறிவிப்புக்குப் பின்னால், இஸ்ரேலுடன் எந்தவித தொடா்பும் இல்லாத கப்பல்கள் மீதும் அவா்கள் தாக்குதல் நடத்துவது அதிகமாகியது. அந்த வகையில், இதுவரை 27 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உலகின் மிக முக்கியமான கடல்வணிக வழித்தடமான அந்தப் பகுதியில் சரக்குப் போக்குவரத்து மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்து பல்வேறு நாடுகளுக்கும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, செங்கடலில் ஹவுதி படையினர்களிடமிருந்து சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை, சிங்கப்பூா் போன்ற பல்வேறு நாடுகளும் தங்களது போா்க் கப்பல்களை அங்கு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியிருப்பதுடன், தாக்கப்படும் கப்பல்களையும் மீட்டுவருகின்றன.

செங்கடல் எங்கு உள்ளது? அதனால் என்ன பயன்?

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ள ஈரான், ஹவுதியுடன் கைகோர்த்து செங்கடல் பகுதியை ஆக்கிரமிக்க முயன்று வருவதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். செங்கடல் என்பது சூயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக்கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் முக்கியமான கடல்வழிப் பாதையாகும். உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடங்களுள் ஒன்றாக உள்ள செங்கடல், ஐரோப்பா - ஆசியா இடையேயான கப்பல் போக்குவரத்தில் 15 சதவீதம் பங்கு வகிக்கிறது. செங்கடல் நீண்டகாலமாக சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி போக்குவரத்திற்கான ஒரு முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. அதன் முக்கியத்துவம் சூயஸ் கால்வாயால் கவனம் ஈர்க்கப்படுகிறது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் கணிசமான பகுதி செங்கடல் வழியாகச் செல்வது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, செங்கடல் பகுதியில் போக்குவரத்து முடங்கினால் பெரிய அளவில் பொருளாதாரப் பாதிப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. அதாவது, ஆசியாவில் இருந்து ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுக்ளுக்கு ஒரு வணிகக் கப்பல் செங்கடல் வழியாகச் செல்லாமல் மாற்று வழியில் செல்ல வேண்டும் என்றால், ஆப்பிரிக்க நாடுகளைச் சுற்றி பயணிக்க வேண்டும். இது பயண நேரத்தை அதிகரிக்கும் என்பதால் பொருளாதார அளவில் பாதிப்புகள் ஏற்படும் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

ஹவுதி அமைப்பினருக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

முன்னதாக, கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால், அதையும் மீறி ஹவுதி அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பதிலடி கொடுக்க ஆரம்பித்தன. அதன்படி, இதுவரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தும் 50க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகள்மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதனால், ஏமன் வளைகுடா பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றமான சூழல் உள்ளது. ஏமன் மீதான தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தொடர்ந்து ஏமன் மீது தாக்குதல் தொடருமானால், கச்சா எண்ணெய் விலை உயரும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹவுதி அமைப்பினர் என்பவர் யார்? அவர்களுடைய குறிக்கோள் யாது?

தென்மேற்கு ஆசிய நாடான ஏமனை மையமாகக் கொண்டு ஹவுதி அமைப்பினர், ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஹவுதி அமைப்பினர் ஆளும் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, 2014 முதல், ஏமன் தலைநகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற பிற பயங்கரவாத அமைப்புகளைப்போலவே இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான குழுவாக ஹவுதி அமைப்பினர் இயங்கிவருகின்றனர். 1990களில் ஏமனில் உருவான இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வப் பெயர், அன்சார் அல்லா (கடவுளின் கட்சிக்காரர்கள்) என்பதாகும். ஹவுதி அமைப்பினர், ஷியா முஸ்லிமின் துணைப் பிரிவான ஜைதிகள் பிரிவைச் சேர்ந்த ஆயுதமேந்திய குழுவினர் ஆவர். ஹவுதிகள் அமைப்பை நிறுவிய ஹுசைன் அல் ஹுதி என்பவரை நினைவுகூரும் வகையில், அந்தக் குழுவினர் ஹவுதி அமைப்பினர் என அழைக்கப்படுகின்றனர். ஏமன் உள்நாட்டுப் போரில் அந்நாட்டின் பெரும் பகுதியைக் கைப்பற்றியவர்கள்தான் இந்த ஹவுதிப் படையினர். இதில் எண்ணற்ற உயிர்கள் பலியாகின என்பதும் லட்சக்கணக்கான மக்கள் பிறநாடுகளில் இடம்பெயர்ந்துள்ளனர். சன்னி முஸ்லிம்களிடமிருந்து இருந்து ஆட்சியைப் பிடித்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவிற்கு எதிராக இயங்க நினைப்பதே ஹவுதி அமைப்பினரின் முக்கியக் குறிக்கோளாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இஸ்ரேல் - ஈரான் இடையே இந்தியா உறவு எத்தகையது?

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் மோதல் இருந்தாலும், இந்த இரண்டு நாடுகளிடமும் இந்தியா நட்புறவு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இவ்விரு நாடுகளுக்கும் இடையே இந்தியாவின் ஆதரவு பலமாகவும் ஆழமாகவும் உள்ளது. எனினும், இஸ்ரேலுடன் இந்தியாவும் இந்தியாவுடன் ஈரானும் நெருங்கிய உறவு கொண்டிருந்தாலும், ஈரான் விஷயத்தில், இஸ்ரேல் இந்தியாவை ஆதரிக்காது; அதுபோல் இஸ்ரேல் விஷயத்தில் ஈரான் இந்தியாவை ஆதரிக்காது என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com