உத்தரப்பிரதேசம் லக்னோவில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, தகராறு ஒன்றில் மனோஜ் என்பவர் சோனுவின் தாயாரை அவமானப்படுத்தியதுடன் அடித்து உதைத்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். தன் தாய்க்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை சோனுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் வருத்தமடைந்த சோனு, ஓடிப்போன மனோஜ் மீது கடும் கோபம் கொண்டுள்ளார். தவிர, அவரைக் கொலை செய்யும் நோக்கிலும் இருந்துள்ளார். இதற்காகக் காலம் கடந்தாலும், தனது தேடலை விடாமல் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில்தான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, முன்ஷி புலியா பகுதியில் மனோஜை சோனு கண்டுள்ளார். அதுமுதல், அவரை சோனு நோட்டமிடத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே, அவரைக் கொலை செய்வதற்கு நான்கு கூட்டாளிகளையும் சோனு சேர்த்துள்ளார்.
இந்தச் சம்பவம் உறுதியாக நிகழ்ந்துவிட்டால் மது விருந்து வைப்பதாகவும் தன் நண்பர்களுக்கு சோனு உறுதியளித்துள்ளார். இதையடுத்து கடந்த மே மாதம் 22ஆம் தேதி மனோஜை, சோனு கும்பல் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது. உயிருக்குப் போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதற்காக சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். ஆனாலும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே அவர்களின் மதுவிருந்து படங்களும் சோனுவின் நண்பர்களால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன. அதன்மூலம் பொறிவைத்துப் பிடித்த போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.