குஜராத்திலிருந்து நேற்று (ஜூன் 12) லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்களைத் தவிர்த்து குடியிருப்பில் இருந்த மருத்துவ மாணவர்களும் பலியாகினர். இவர்களைக் கண்டெடுக்கும் பணியில் காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உடல்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டு DNA சோதனையும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, விபத்து தொடர்பாகப் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், விபத்துக்குள்ளான மருத்துவமனை விடுதியில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர், தனது தாயையும் மகளையும் காணாது, அவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் கண்ணீர் வடிக்கிறார்.
பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருபவர் ஷர்லபென் தாக்கூர். இவரது மகன் ரவி. இவருடைய இரண்டு வயது மகள் ஆதியா. இந்த நிலையில், விமானம் மோதியபோது வேறொரு பகுதிக்கு உணவு விநியோகிக்க ரவி சென்றுள்ளார். அந்தச் சமயத்தில் ரவியின் தாயாரும், அவருடைய மகளும் அங்கே இருந்துள்ளனர். விமான விபத்தில் அவர்களும் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களையும் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ரவி, “ஜூன் 12 எங்களுக்கு வழக்கமான வேலை நாள் போல இருந்தது. வழக்கம் போல மருத்துவமனை ஊழியர்களுக்கும், விடுதிக்கும் உணவு வழங்க நான் மதியம் 1 மணிக்கு புறப்பட்டேன். திரும்பி வந்ததும், விமானம் மோதியதை அறிந்தேன். என் அம்மா அமர்ந்திருந்த இடம் கருகிப் போய் உள்ளது. அவருடன் என் மகளும் இருந்தார். நேற்று முதல் அவர்களைத் தேடி வருகிறோம். ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை” எனத் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.