காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சராகவும் இருந்த சிவராஜ் பாட்டீல் (91) மஹாராஷ்டிர மாநிலம் லத்தூர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபோது, வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் இன்று காலை உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில், சிவராஜ் பாட்டீலின் அரை நூற்றாண்டுகால அரசியல் பயணத்தில் சில பகுதிகளை குறித்துப் பார்க்கலாம்...
பொதுவாழ்வில் நேர்மை, தொய்வில்லா மக்கள் சேவை என ஒருகாலகட்டம் வரை அரசியல் களத்தில் அதிகம் அறியப்பட்டிருக்கிறார் சிவராஜ் பாட்டீல். மஹாராஷ்ட்ர மாநிலம் லத்தூரில் 1935ஆம் ஆண்டு பிறந்தவர். சட்டம் பயின்ற சிவராஜின் அரசியல் பயணம் 1980களில் வீரியமடைந்தது. லத்தூர் நகராட்சித் தலைவராக மக்கள் பணியை தொடங்கிய சிவராஜ் பாட்டீல் சீரான வளர்ச்சியை எய்தினார். அதே மக்களவை தொகுதியில் ஏழு முறை அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கின்றனர் மக்கள்.
அந்த காலகட்டத்தில் இந்திரா காந்தி அமைச்சரவையில் பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இணையமைச்சராக பொறுப்பு வகித்திருக்கிறார் சிவராஜ் பாட்டீல் . இந்திரா படுகொலைக்கு பின் ராஜீவ்காந்தி அமைச்சரவையிலும் அங்கம் வகித்திருக்கிறார். 1991ஆம் ஆண்டு தொடங்கி 1996 வரையிலான காலகட்டத்தில் மக்களவை சபாநாயகராக திறம்பட செயல்பட்டிருக்கிறார். இதன் பின்னர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004ஆம் ஆண்டு தொடங்கி 2008ஆம் ஆண்டு வரை உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்திருக்கிறார். 2008ஆம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலால் விமர்சனத்துக்கு ஆளானது உள்துறை. பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
2010ஆம் ஆண்டு தொடங்கி 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராகவும், தலைநகர் சண்டிகரின் நிர்வாகியாகவும் சிவராஜ் பாட்டீல் இருந்துள்ளார். மஹாராஷ்ட்ரா சட்டமன்றத்திலும் அவைத் தலைவராக இருந்திருக்கிறார். இந்திரா, ராஜீவ், மன்மோகன் அரசுகளில் அங்கம் வகித்த சிவராஜ் பாட்டீல், இந்திய அரசியலில் அனைத்து கட்சி தலைவர்களாலும் போற்றப்பட்ட சப்தமில்லாத ஒரு சகாப்தமாக தம் வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.