மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும், பிப்ரவரி 1ஆம் தேதி 2026-2027ஆம் ஆண்டுக்கான நாட்டின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார். மேலும், 2019 ஆண்டு முதல் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 9-ஆவது பட்ஜெட். மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தாலும் அதை உருவாக்குவதன் பின்னணியில் ஒரு குழுவே உள்ளது. இந்நிலையில், இம்முறை அக்குழுவில் யாரெல்லாம் உள்ளனர் என்பது குறித்து பார்க்கலாம்.
நாட்டின் பட்ஜெட் தயாரிப்பு குழுவில் முக்கியமானவர் பொருளாதார விவகாரத் துறை செயலர் அனுராதா தாக்கூர். நிதி ஒதுக்கீடுகளை இவர்தான் முடிவு செய்வார். பட்ஜெட்டின் பேரியல் பொருளாதார கட்டமைப்பை வகுப்பதும் இவரே. அடுத்ததாக, வருவாய்த் துறை செயலர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, பட்ஜெட்டில் வரி பிரிவுகளை கவனிப்பவர். நேரடி வரி மற்றும் மறைமுக வரி விதிப்புகள், சலுகைகள் அனைத்தையும் இவரது குழுதான் முடிவு செய்யும். அடுத்து, செலவினத் துறை செயலர் வம்லுன்மங் வுயல்நாம், செலவினங்களை முடிவு செய்வது, மானியங்களை சூழலுக்கேற்ப சீரமைப்பது போன்றவை இவரது பொறுப்பு. சுருக்கமாகச் சொன்னால், அரசின் பர்ஸை இறுக்கிப்பிடிப்பது இவரது பணி.
தொடர்ந்து, நிதிச்சேவைகள் துறை செயலர் எம்.நாகராஜு, இவருக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச்சேவைகளைக் கவனிக்கும் பொறுப்பு உள்ளது. பொதுத் துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வூதிய திட்டங்கள், ஏற்றுமதியாளர்கள் தொடர்பான விவகாரங்களை இவர் கவனிப்பார். முதலீடுகள் மற்றும் அரசு சொத்துகள் மேலாண்மைத் துறை செயலர் அருணிஷ் சாவ்லா, பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனை உள்ளிட்ட வரி அல்லாத வருவாயை அதிகரிக்கும் பொறுப்பு இவருடையது. பொது நிறுவனங்கள் துறை செயலர் மோசஸ் சலாயின் பணி பொதுத் துறை நிறுவனங்களின் செலவின திட்டங்களை மதிப்பிட்டு தருவதாகும்.
மேலும், இந்த 6 துறைச் செயலர்கள் தவிர, தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரனும் இக்குழுவில் முக்கிய பங்களிப்பை வழங்குபவர். பட்ஜெட்டிற்கான உள்ளீட்டுத் தகவல்களை வழங்குவது, சீர்திருத்த ஆலோசனைகள் வழங்குவது, எதுபோன்ற நிதிக்கொள்கைகள், யுக்திகளை கையாளலாம் என்பது போன்ற வழிகாட்டுதல்களை வழங்குவது இவரது பணி. இவர்கள் அனைவரும் தரும் உள்ளீடுகளை ஒருங்கிணைத்து நிதியமைச்சர் உருவாக்குவதே மத்திய பட்ஜெட்டாக தாக்கலாகிறது.