'RTI சட்டத்தில் சீர்திருத்தம் தேவை..' பொருளாதார ஆய்வு அறிக்கை பரிந்துரை!
பொருளாதார ஆய்வறிக்கை, அரசின் உள்விவாதங்கள் வெளிப்படையாக வெளியாவதால் அதிகாரிகள் முடிவெடுக்க அஞ்சுவதாகவும், இது நிர்வாக திறனை பாதிக்கிறது எனவும் கூறுகிறது. எனவே RTI சட்டத்தில் சீர்திருத்தம் தேவை என பரிந்துரைக்கிறது.
அடுத்தாண்டு என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான அறிக்கையாக பட்ஜெட் உள்ள நிலையில், இந்தாண்டு என்னசெய்தோம், நாட்டின் நிலைமை என்ன என்பதை படம் பிடித்துக்கூறுவதே பொருளாதார ஆய்வறிக்கை.
பொதுவாக பட்ஜெட்டுக்கு முந்தைய ஓரிரு நாட்களில் நாடாளுமன்றம் மூலம் நாட்டுமக்களுக்கு இது தெரிவிக்கப்படும். நெல், கோதுமை உள்ளிட்ட உணவுதானியங்களின் விளைச்சல் அதிகரித்ததா, தொழில் துறை உற்பத்தி அதிகரித்ததா? அதிகரிக்காவிட்டால் என்ன காரணம்? என்பன போன்ற தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும்.
இந்தசூழலில் 2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழு இந்தஅறிக்கையை தயாரித்துள்ளது.
RTI சட்டத்தில் சீர்திருத்தம் தேவை..
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.
அரசின் உள்விவாதங்கள் உடனுக்குடன் வெளியாவதால், அதிகாரிகள் தயக்கமின்றி முடிவெடுக்க அஞ்சுவதாகவும், இது நிர்வாகத் திறனைப் பாதிப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. தனிப்பட்ட பழிவாங்கல் மற்றும் அதிகாரிகளைத் துன்புறுத்த இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், விண்ணப்பங்கள் அதிகம் வருவதால் நிர்வாகப் பணிச்சுமை அதிகரிப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.
ஆர்டிஐ சட்டத்தின் அடிப்படை நோக்கத்தைச் சிதைக்காமல், அதே சமயம் அரசின் செயல்பாடுகள்முடங்காமல் இருக்க சீர்திருத்தம் தேவைஎன்று பொருளாதார ஆய்வறிக்கைகுறிப்பிட்டுள்ளது.

