மும்பை மற்றும் நாக்பூரை இணைக்கும் சம்ரித்தி நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 29ஆம் தேதி, இரவு 10 மணியளவில் வாஷிம் மாவட்டத்தில் உள்ள மாலேகான் மற்றும் வனோஜா டோல் நாகா பகுதிகளில், பல்வேறு இடங்களில் இருந்து நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது, இரும்புத் தகடு சாலையில் விழுந்து கிடந்ததில் ஒன்றன்பின் ஒன்றாக வந்தாக 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பஞ்சராயின. அதாவது, அந்த இரும்புப் பலகை மீது ஏறிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பல வாகனங்களின் டயர்களை உடைத்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், நீண்டநேரமாகியும் எவ்வித உதவியும் கிடைக்காததால், இரவு முழுவதும் நெடுஞ்சாலையில் பயணிகள் தவித்தனர். பலகை தவறுதலாக விழுந்ததா அல்லது வேண்டுமென்றே வீசப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மறுபுறம், இந்தச் சாலையில் அதிக விபத்துகள் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம், இந்த நெடுஞ்சாலையில் கட்வாஞ்சி கிராமத்திற்கு அருகில் உள்ள சம்ரித்தி மகாமார்க்கில் இரண்டு கார்கள் மோதியதில் ஆறு பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர்.
சம்ரித்தி மகாமார்க் என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பகுதியளவில் செயல்படும் ஓர் ஆறுவழிச்சாலை ஆகும். இதன் 701 கிமீ நீளம் ஆகும். இது மும்பை மற்றும் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமான நாக்பூரை இணைக்கும் நாட்டின் மிக நீளமான கிரீன்ஃபீல்ட் சாலை திட்டங்களில் ஒன்றாகும். இது, 55,000 கோடி செலவில் அமைக்கப்பட்டது.