செய்தியாளர் - கார்த்திகேயன்
வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, அது தற்போது வலுப்பெற்று வருகிறது. இது புயலாக உருவெடுத்தால், அர்னாப் என்று பெயரிடப்பட உள்ளது. இந்த வானிலை நிகழ்வு, ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது புயலாக உருவெடுத்தால், வரும் அக்டோபர் 28-ஆம் தேதி அன்று, ஆந்திராவில் உள்ள பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கரையை கடக்கும்போது 115 கிலோ மீட்டர் முதல் 125 கிலோ மீட்டர் வரையில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில், காற்றின் வேகம் 140 கிலோ மீட்டர் வரை கூட இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படியான சூழ்நிலையில், இந்த வானிலை நிகழ்வால், ஆந்திராவின் அன்டை மாநிலமான ஒடிசாவில் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட உள்ளது என்ற விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒடிசாவில் உள்ள கஞ்சம், கஜபதி, ராயகடா, கோராபுட், மல்ககிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 20 சென்டி மீட்டர் அளவுக்கு அதிகமான கனமழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 60 விரைவு மீட்பு படை குழுக்கள், 17 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள், 225 தீயணைப்புத்துறையின் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
மின்சாரம், குடிநீர் விநியோகம் மற்றும் சாலைப் போக்குவரத்து முடங்குவதைத் தவிர்க்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளும் பயிர்களைப் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வானிலை நிகழ்வால் தான், புதுச்சேரி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, புதுச்சேரியில் தொடர் மழை பெய்து வருவதுடன், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் உள்ளவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.