operation sindoor x page
இந்தியா

OPERATION SINDOOR | பலியான 5 பயங்கரவாதிகள்.. வெளியான விவரம்!

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பலியான 5 பயங்கரவாதிகளின் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

Prakash J

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் - இந்தியா இடையே போர் தீவிரமாய் நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த 7ஆம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் விமானப் படையும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்களைத் துல்லியமாக அழித்தது.

இந்த தாக்குதலில் 100 பேர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இத்தாக்குதலில் பலியான 5 பயங்கரவாதிகளின் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. முடாசர் காதியான் காஸ், ஹாஃபிஸ் முகமது ஜமீல், முகமது யூசுப் அசார், காலித் என்ற அபு ஆகாஷா மற்றும் முகமது ஹசன் கான் என அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

opertaion sindoor

முடாசர் காதியன் காஸ்

முடாசர் மற்றும் அபு ஜுண்டால் என்ற பெயர்களால் அறியப்பட்ட காஸ், லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர். இந்திய எல்லையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பாகிஸ்தானின் முரிட்கேவில் அமைந்துள்ள மர்காஸ் தைபா என்ற பயங்கரவாத முகாமின் பொறுப்பாளராக அவர் இருந்தார். இது எல்.இ.டி.யின் தலைமையகமாக செயல்பட்டது. 2008 மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப், இந்த முகாமில்தான் பயிற்சி பெற்றதாக ஒப்புக்கொண்டார். 26/11 தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதி டேவிட் ஹெட்லியும் இங்கு பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. காஸின் இறுதிச்சடங்கு, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் அப்துல் ரவூஃப் தலைமையில் அரசுப் பள்ளியில் நடைபெற்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது இறுதிச்சடங்கில், காஸுக்கு பாகிஸ்தான் ராணுவம் மரியாதை செலுத்தியது, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீர் மற்றும் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் சார்பாக உயர் ராணுவ அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஹாஃபிஸ் முகமது ஜமீல்

இவர், ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடையவர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவின் நிறுவனர் மௌலானா மசூத் அசாரின் மைத்துனர் ஆவார். பாகிஸ்தானுக்குள் சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள பஹவல்பூரின் மர்காஸ் சுப்ஹான் அல்லாவின் பொறுப்பாளராக அவர் இருந்தார். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்யக்கூடியவர்களை அவர் தீவிரமாக ஊக்குவித்து நிதி திரட்ட உதவியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பஹவல்பூர் முகாம் ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் புதியவர்களை அறிமுகப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இந்த முகாமிற்கு அசார் அடிக்கடி அங்கு சென்று வந்துள்ளார்.

முகமது யூசுப் அசார்

உஸ்தாத் ஜி மற்றும் முகமது சலீம் என்ற யூசுப் அசார், ஜெய்ஷ் அமைப்பைச் சேர்ந்தவர். இவரும், மசூத் அசாரின் மைத்துனர் ஆவார். இவர், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்கான ஆயுதப் பயிற்சியையும் மேற்கொண்டார். ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பல பயங்கரவாதத் தாக்குதல்களிலும், 1999ஆம் ஆண்டு ஐசி-814 விமானக் கடத்தலிலும் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.

operation sindoor

காலித் என்ற அபு ஆகாஷா

காலித் என்கிற அபு ஆகாஷா, ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட லஷ்கர் பயங்கரவாதி ஆவார். ஆப்கானிஸ்தானில் இருந்து எல்.இ.டி.க்கு ஆயுதங்களைக் கடத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். பைசலாபாத்தில் நடந்த அவரது இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பைசலாபாத் துணை ஆணையர் கலந்து கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

முகமது ஹசன் கான்

இவர், தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது குழுவைச் சேர்ந்தவர். அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள JeM-இன் செயல்பாட்டுத் தலைவரான முஃப்தி அஸ்கர் கான் காஷ்மீரியின் மகன் ஆவார். மேலும் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.